Thursday, August 12, 2004

அமைதியை நிலைநாட்டும் வழிமுறைகளில் இதுவும் ஒன்றோ?



அன்று ஈழத்தில் எது நடந்ததோ அது இன்று நன்றாகவே நடக்கிறது மணிப்பூரில். நான் நினைக்கிறேன் மணிப்பூரிலும் ஒரு கையை முதுகுக்கு பின்னால் கட்டிக்கொண்டு அமைதியை நிலைநாட்டுகின்றனர் போலும்!

வாழ்க தீவிரவாத ஒழிப்புப் பணி!

வாழ்க தேசிய நீரோட்டம்!

வாழ்க ஜனநாயகம்!

Tuesday, August 10, 2004

இலங்கை; கிழக்கு மாகாண பதட்டமும், வல்லரசுகளின் சதிகளும்!

லங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவுகின்ற பதட்டமான சூழ்நிலையைப் பயன்படுத்தி ,தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழ் மக்களை அந்நியப் படுத்தும் நோக்குடன் இந்திய புலனாய்வுத்துறை உள்ளிட்ட சக்திகள் செயற்பட்டு வருவதாக கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற "சமாதான முயற்சிகளின் தடைகளும் உலக நாடுகளின் கொள்கை வகுப்புக்களும்" எனும் கருத்தரங்கின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை விரிவுரையாளரும், விமர்சகருமாகிய கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்து இருக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி அதன் மூலம் தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தினை நசுக்குவதே அந்நிய சக்திகளின் குறிக்கோளாக இருப்பதாகவும், மேற்படி இரு நோக்கங்களும் நிறைவேறியதும் தமக்கு சார்பானவர்களை பதவியில் அமர்த்தி இலங்கைத் தமிழர்களை இந்தியா பாதுகாக்கிறது எனும் ஒரு தோற்றப் பாட்டை ஏற்படுத்துவதே இந்தியாவின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் கருதி அமெரிக்கவும் ,இந்தியாவை போன்றே, இலங்கையின் வளங்களை, நலன்களை பயன்படுத்துவதற்கான வழி முறைகளைப் பிரயோகித்து வருவதாகவும், திருமலை எண்ணைக் குதங்களை இந்தியா குத்தகைக்கு பெற்றுக் கொண்டமை, அமெரிக்காவுக்கு திருகோணமலை துறைமுகம், விமானத்தளம் போன்றவற்றை பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட அனுமதி போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இரண்டு வல்லரசுகளுக்கும் சமமான நலன்கள் வழங்கப்பட்டிருப்பத்தையும் காணமுடியும் எனவும் கூறியிருந்தார்.

மேலும் இலங்கையில் போர் நடைபெறுவது அமெரிக்காவின் பிராந்திய நலன்களுக்கு ஆபத்தானது என்பதை புரிந்துள்ள அமெரிக்கா இலங்கையின் வடபகுதியில் இருந்து கிழக்கு பகுதியை தனிமைப் படுத்தி ஒரு தீர்வைக் கொண்டு வருவதின் மூலம் இந்து சமுத்திரம் மற்றும் ஆசியாவிலும் தனது கால்களை ஊன்றிக்கொள்ளமுயல்வதாகவும் திரு கே.ரி.கணேசலிங்கம் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்திய புலனாய்வாளர்கள் யாழ் குடாவில் வியாபாரிகள் எனும் போர்வையிலும், வன்னியில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடாகவும் ஊடுருவி இருப்பதாக அண்மையில் இலங்கைப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னாள் இந்திய இராணுவ வீரர்களை உறுப்பினர்களாக கொண்ட மேற்படி கண்ணிவெடி அகற்றும் இரண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள், தரம் பற்றி அதிருப்தி தெரிவித்த உலக வங்கியானது அவர்களுக்கான நிதி உதவியை வழங்க மறுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.