Sunday, December 19, 2004

மீண்டும் யாழ்பாணத்திலிருந்து "சிரித்திரன்"

சிறு வயதில் என்னை ஆனந்தவிகடன் எப்படி நகைச்சுவையால் மகிழ்வித்ததோ அதற்கு சற்றும் குறையாமல் மண் வாசனையுடன் மகிழ்வித்தது யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த"சிரித்திரன்" இதழ் .

திரு எஸ்.சிவஞானசுந்தரத்தினால் வெளியிடப்பட்ட அந்த நூலில் இடம்பெற்ற கருத்தோவியங்கள் காலத்தால் மறக்கமுடியாதவை. சிரிக்க வைத்ததுடன் மக்களை சிந்த்திக்கவும் வைத்தவை. கார்ட்டூன் என்பதை கேலிச்சித்திரம் என்று தமிழ்நாட்டிலிருந்து வரும் இதழ்கள் பயன்படுத்திய காலங்களில் கருத்தோவியம் என்று அதற்குரிய சரியான சொல்லை அறிமுகப்படுத்தியதுடன் இன்றும் ஈழத்தில் கருத்தோவியம் என்ற சொல் புழங்கி வருவதற்கும் காரணி திரு.எஸ்.சிவஞானசுந்தரம் ஆவார்.

மண்வாசனையுடன் வந்த அவரின் படைப்புக்களான சவாரித்தம்பர் என்ற கருத்தோவிய கதாபாத்திரம்,மற்றும் சின்னக்குட்டி,மைனர் மச்சான், மிஸ்டர் அண்ட் மிஸிஸ் டாமோதரம், மகுடியார் ,மெயில் வாகனத்தார்,ஷீமான் செல்லக்கிளி, வேலரும் மயிலரும் இன்றும் பல ஈழத்தவரின் மனத்தில் நிலைத்து நிற்பவை.

இதில் மைனர் மச்சான் பாத்திரமானது அந்த கால படித்தவேலையற்ற ஈழத்து இளைஞனை பிரதிபலித்த ஒருபடைப்பாகும். வேலைதேடும் ,அதில் தோல்விகளையே சந்தித்த ஒருவர்.காதலுக்கு தூண்டில் போடும் அவருக்குகாதலிலும் வெற்றிகிட்டாது.இடையிடை மது பாவித்து விட்டு புலம்பும் அவருக்கு அந்த்த காலத்தில்பிரபலமான பெல்பொட்டம் பாண்டும் ,காலர் பெரிதான உடலை இறுக்கும் சேட்டும் ,நீண்ட தலை முடியும் வரைந்திருப்பார் திரு சுந்தர்.

"செய்யும் தொழிலே தெய்வம் சிரிப்பே சீவியம்" என்னும் வாசகங்களுடன் வெளிவந்த சிரித்திரன் சஞ்சிகைசுந்தரின் மறைவின் பின்னர் வெளிவரவில்லை. தற்போது சில வருட காலத்தின் பின்னர் மீண்டும் சிரித்திரன் சஞ்சிகையானது வெளிவர இருக்கிறது எனும் ஒரு நற்செய்தியை அறியமுடிந்தது. மீண்டும் ஈழத்தவரின் கரங்களில் தவழும் சிரித்திரன் இதழானது முன்னைப் போலவே தரத்திலும்,சமூக முன்னேற்றத்திலும் அக்கறையாக இருக்கும் என நம்பலாம்.

Wednesday, December 15, 2004

மதத்தீவிரவாத பேராபத்து.!

நேற்றைய தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியத்தலையங்கம் இது. தேவை கருதி அதை இங்கு மீண்டும் பிரசுரித்திருக்கிறேன். நன்றி- தினக்குரல்

கொழும்பு குதிரைப் பந்தய திடலில் கடந்த சனிக்கிழமை இரவு பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் குழுவினரின் நிகழ்ச்சியின் இறுதியில் இளவயதினர் இருவரைப் பலிகொண்டு பலரைக் காயமடையவைத்த கிரனேட் தாக்குதல் சம்பவத்துக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென்று எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி ஒருவரே பின்னணியில் இருந்ததாக அரசாங்கமும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்த வண்ணமிருக்கின்றன.

அந்த நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுப்பதற்கான பிரயத்தனமாக பௌத்த பிக்குமார் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று ஜாதிக ஹெல உறுமயவினர் இப்போது கூறுகிறார்கள்.
திருமதி குமாரதுங்க தனது ஜனாதிபதி பதவியின் 10 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு மாத்தறையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் நேர்மையான மார்க்கத்தில் மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்துக்கு தங்களால் வரமுடியாதென்பதை உணர்ந்து விட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியொருவர் தனது குண்டர்களைப் பயன்படுத்தி நாட்டில் அச்சத்தையும் வன்முறைகளையும் மூளவைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் என்று முற்றிலும் கட்சி அரசியல் உணர்வுடனான குற்றச் சாட்டொன்றை முன்வைத்திருக்கிறார்.

கிரனேட் தாக்குதல் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கும் இந்திய அரசாங்கம் இலங்கைப் பொலிஸாரின் விசாரணை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக அறிவித்திருக்கிறது.
உண்மையிலேயே அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ குதிரைப் பந்தயத் திடல் கிரனேட் தாக்குதல் சம்பவத்துக்கு வழிவகுத்த அரசியல்-மதவாதப் பின்னணிகளை உகந்த முறையில் நோக்குவதற்குத் தயாராயில்லை; மாறாக, அந்தப் பின்னணிகளின் ஆரோக்கியமற்ற தன்மைகளை மூடிமறைத்து தங்களுக்கு அரசியல் ஆதாயத்தைத் தேடும் வக்கிர உணர்வுடனேயே அவை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் பௌத்த பிக்குமாரின் வெளிப்படையான பிரவேசத்தினால் தோன்றியிருக்கும் தற்போதைய சர்ச்சைகளைவிட மிகவும் கூடுதலான அளவுக்கு செல்வாக்கைச் செலுத்தி அரசியலில் மதவாதத்தை முனைப்புடன் முன்னெடுக்கக் கூடியவராக வந்திருக்கக் கூடிய கங்கொடவில சோம தேரரின் முதலாவது நினைவு தினத்தன்று ஷாருக்கான் குழுவினரின் களியாட்ட நிகழ்ச்சி நடத்தப்படக் கூடாது என்ற பௌத்த பிக்குமாரில் ஒரு பிரிவினரின் கோரிக்கையே அன்றைய அசம்பாவிதங்களுக்குக் காரணம்.

இலங்கை அரசியலில் பின்னணியில் இருந்து பிக்குமார் செல்வாக்கைச் செலுத்தி ஆட்சியாளர்களின் நடத்தைப் போக்குகளைத் தீர்மானித்து வந்திருக்கிறார்கள் என்ற போதிலும், அண்மைக் காலமாக அவர்களில் ஒரு சாரார் காண்பிக்க ஆரம்பித்திருக்கும் நேரடி அரசியல் ஈடுபாடு ஏற்கெனவே ஆரோக்கியமற்றதாக இருக்கும் தென் இலங்கை அரசியல் அரங்கில் மேலும் இருள் சூழ்ந்த சிந்தனைப் போக்குகளின் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கப் போகின்றது என்பதை தெளிவாக உணர முடிகிறது.

குறிப்பிடத்தக்க சில புறநடைகள் இருந்த போதிலும், இலங்கை அரசியலில் பிக்குமாரின் பாத்திரம் அநேகமாக எதிர் மறையானதாகவே இருந்து வந்திருக்கிறது. கௌதம புத்தரின் சிந்தனைகளையே அவமதிக்கின்ற வகையிலான 'சிங்கள பௌத்தம்" என்ற கருத்தாக்கம் இதற்கு ஒரு பிரகாசமான உதாரணம். மஞ்சள் அங்கி அணிந்த ஒரு பிக்கு சிங்கள மக்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட ஒரு பிரதமரைச் சுட்டுக் கொன்றதும் இன்னொரு பிக்கு இக் கொலையில் குற்றஞ் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை பெற்றதும் தற்செயலானவையல்ல. சிங்களவர் மத்தியில் நிலவும் சிந்தனைக் குழப்பம், செயல் குழப்பம் ஆகியவற்றுக்கு சிங்கள, பௌத்த மத சிந்தனையில் ஒழுக்க நியாய பாரம்பரியம் ஒன்று இல்லை என்பதற்கான சரித்திர நினைவுச் சின்னம் போன்ற சான்றே இச்சம்பவங்கள்.

இலங்கையின் மாபெரும் வரலாற்றுப் பதிவேடாகக் கருதப்படும் மஹாவம்சம், மகாநாம என்ற மதகுருவால் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. மஹாவம்ச நூலின் பிரதிகள் அனைத்தையும் தீயில் பொசுக்க வேண்டும். ஏனென்றால், சிங்கள பௌத்தர்களின் இன ரீதியான சிந்தனைக்கு அவைதான் பெரிதும் பொறுப்பாயிருக்கின்றன என்று மதிப்புக்குரிய ஒரு சிங்களக் கல்விமான் கலாநிதி ஈ.டபிள்யூ. அதிகாரம் தெரிவித்திருந்ததை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

'கௌதம புத்தர் அரசியல், போர் மற்றும் சமாதானம் ஆகியவை குறித்து மிகவும் தெளிவாகவே போதித்திருக்கிறார். பௌத்த மதம் அதன் போதனைகளில் அகிம்சையையும் சமாதானத்தையும் மக்களுக்கான செய்தியாக வலியுறுத்துகிறது; எந்த வகையான வன்முறையையோ அல்லது உயிர்ச் சேதத்தையோ அது ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. பௌத்த சிந்தனைகளின் படி நீதியான போர் என்று கூட ஒன்று இல்லை" என்று 'புத்தர் போதித்தது என்ன?" என்ற தேரவாத பௌத்தம் குறித்த பிரபல பாடநூலை எழுதிய பேராசிரியர் வல்பொல ராகுல தேரோ கூறியிருக்கிறார்.

ஆனால், இன்று இலங்கையில் அநேகமான பௌத்த பிக்குமார் இந்தப் போதனைக்கு முற்றிலும் மாறாக அல்லவா செயற்படுகிறார்கள். அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான போரை நியாயப்படுத்துவதுடன் மஞ்சள் அங்கிகளை களைந்துவிட்டு துப்பாக்கியைக் கையில் ஏந்திப் போர் முனைக்குச் செல்லவும் தயார் என்று பகிரங்கமாக மேடைகளில் முழங்குகிறார்கள். சிறுபான்மையினத்தவர்களின் நியாயபபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசைகளையையும் ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள்.

அண்மைக் கால சமாதான முயற்சிகளுக்கு எதிரான பிரசார இயக்கங்களில் பிக்குமார் முன்னணியில் நின்று செயற்படுகிறார்கள். சிறுபான்மை இனத்தவர்கள், மதத்தவர்களுக்கு எதிரான பிரசாரங்களை நிகழ்ச்சித் திட்டங்களாகக் கொண்டே அவர்கள் நேரடி அரசியலிலும் இறங்கியிருக்கிறார்கள்.

அமைதி, சமாதானத்துக்கு எதிராக செயற்படுகின்ற அரசியல்வாதிகளை சரியான வழியில் நெறிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பைக் கொண்ட பிக்குமார் அந்த அரசியல் வாதிகளை விடவும் தீவிரமாக அமைதிக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். சமாதானத்தின் பெறுமதியை சமுதாயம் விளங்கிக் கொள்வதற்கு பெரும் தடையாக இந்த பிக்குமார் இலங்கையில் விளங்குவதை அடிப்படையாகக் கொண்டே இன்றைய துரதிர்ஸ்டவசமான நிலைவரங்களின் பின்னணிகளை நோக்க வேண்டும்.

பௌத்த மதத் தீவிரவாதம் அரசியலை வழிநடத்துமானால், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அல்லது கைப்பற்றிய அரசியல் அதிகாரத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கு அரசியல்வாதிகள் அந்தத் தீவிரவாதத்துக்கு இசைவான அனுகுமுறைகளைக் கடைப்பிடிப்பார்களேயானால், இலங்கை அதற்குரித்தான அமைதி மற்றும் பொருளாதார மேம்பாடு சகலவற்றையும் பரிதாபகரமாகப் பறிகொடுத்துஉலகில் தோல்வி கண்ட சமுதாயமாக அந்தகாரத்தில் மூழ்கப் போகிறது.

Saturday, December 11, 2004

நீங்களும் ரசிக்கலாம் கோடையின் வனப்பை.

குளிர் தேசத்தில் வாழும் எமக்கு கோடை காலத்தின் அருமை
ந்ன்றாகவே தெரியும்.
கடும் குளிர் காலம் எப்படி இருக்கும் என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும். கடும் குளிர் காலத்தில் இருக்கும் எமக்கு ஆறுதலாக இருப்பது இவை போன்ற கோடையில் எடுத்த படங்கள் தான்.




Sunday, October 31, 2004

நரசிம்ஹன் ராம் யாருடைய குரல்?

நரசிம்ஹன் ராம் யாருடைய குரல்?

இலங்கைத் தமிழர்களுக்காகப் பரிந்துபேச தமிழகத்தில் வலுவான சக்திகள் இல்லை என்று கூறுவதன் மூலம் யாருக்கு தெம்பூட்டுகிறார்?

பத்திரிகையாளன் என்ற நிலைக்கு அப்பால் இலங்கை விவகாரத்தில் இவர் அதீத ஈடுபாடு


ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் காமினி திசாநாயக்கவின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான "இந்து' வின் பிரதம ஆசிரியர் நரசிம்ஹன் ராம் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.

"இந்தியாவும் இலங்கையும்; முன்னாலுள்ள எதிர்காலம்' என்ற தலைப்பில் ராம் ஆற்றிய ஒரு மணிநேர உரையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அவரைப் பற்றி எம்மை ஆழமாகச் சிந்திக்க வைத்தன.

ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் இலங்கை அரசியல் மீது ராம் ஆரம்பத்தில் காட்டி ய ஈடுபாடு பின்னர், அவரே ஒத்துக் கொள்கின்ற முறையில், பத்திரிகைத் தேவைக்கு அப்பால் சென்று விட்டது. "ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவிடம் இருந்து பேட்டியொன்றைப் பெறுவதற்காகவே நான் அப்போது இலங்கைக்கு வந்தேன். பின்னர் எனது பங்கு பத்திரிகைத் துறைக்கு அப்பால் சென்று விட்டது' என்று அன்றைய நினைவுப் பேருரையில் ராம் குறிப்பிட்டி ருக்கிறார்.

இப்போது ராம் இலங்கை அரசினதும் அரசுக்கு வரக்கூடிய அரசியல் கட்சிகளினதும் உயர் மட்டத் தலைவர்களின் நெருங்கிய நண்பனாக வந்து போகிறார். காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி போன்றவர்களுடனான அதீத நெருக்கம் பற்றிக் குறிப்பிடும் ராம், கடந்த வாரம் உரையாற்றுகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை நண்பர் ராஜபக்ஸ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நண்பர் ரணில் என்றும் அடிக்கடி, விளித்தார். இத்தகையதொரு நெருக்கம் இந்தியாவின் வேறு ஒரு பத்திரிகையின் ஆசிரியருக்கும் இருக்கும் என்று நினைப்பதற்கில்லை.

ராம் மீண்டும் இந்துவின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கை இன நெருக்கடி விவகாரத்தில் அப்பத்திரிகை ஆழமான ஈடுபாட்டைக் காண்பிக்க ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்துடன் கருணா முரண்பட்டுக் கொண்டு வெளியேறிய பின்னர் அந்த விவகாரம் குறித்து "இந்து' பத்திரிகை 4 க்கும் அதிகமான தடவைகள் ஆசிரிய தலையங்கம் தீட்டி யிருந்தது. கருணாவின் சகோதரர் ரெஜி கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் ஆசிரிய தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது. 100 கோடி க்கும் அதிகமான மக்களையும் எண்ணிலடங்காத பிரச்சினைகளையும் கொண்ட இந்திய தேசத்தின் ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகை இலங்கையின் வடக்கு, கிழக்கில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு அரசியல் முக்கியத்துவ நிகழ்வுப் போக்கிற்கும் அதன் பிரதிபலிப்பை ஆசிரிய தலையங்கம் ஊடாக வெளிக்காட்டுகின்றதென்றால், அதன் ஆசிரியருக்கு இலங்கை விவகாரத்தில் ஒரு பிரத்தியேகமான ஈடுபாடு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகள் துரதிர்ஸ்டவசமாகத் தேக்க நிலையடைந்திருக்கும் ஒரு சூழ்நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசு நிலை உறவுகள் எவ்வகையில் அமைந்திருக்கின்றன என்பது குறித்து தனது உரையில் ராம் முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்திருக்கிறார்.
1987 ஜூலை 29 இல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனாவும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் கொழும்பில் கைச்சாத்திட்ட இலங்கை -இந்திய சமாதான உடன்படிக்கையில் இருந்து ஆரம்பித்து, அந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் போன காரணங்களைச் சொல்லி அதன் பின்னரான இன்றைய நிலை பற்றிய தனது ஆய்வைச் செய்திருக்கிறார் "இந்து' பிரதம ஆசிரியர். சமாதான உடன்படி க்கையை நடைமுறைப்படுத்த முடியாமல் போன சூ ழ்நிலைக்கு கொழும்பு செய்த எதிர்மறையான பங்களிப்புக் குறித்து கவனத்தை ஊன்றாமல் மேலோட்டமாகப் பேசிய ராம், விடுதலைப்புலிகள் மீதே அதற்கான குற்றத்தை முழுமையாகச் சுமத்தும் தொனியில் கருத்து வெளியிட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இங்கு ஒரு முக்கிய விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை, இன நெருக்கடி தொடர்பிலான இந்திய அனுகுமுறையை, தற்போதைய சமாதான முயற்சிகள் தொடர்பிலான தங்கள் அனுகுமுறைகளையெல்லாம், 1991 மே 21 க்குப் பின்னரான பின்புலத்திலேயே அதாவது சென்னைக்கு அடுத்ததாகவுள்ள பெரம்புதூரில் ராஜீவ் காந்தி தற்கொலைக் குண்டுப் போராளியினால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னரான இந்திய உணர்வு நிலைகளின் பின்புலத்தில் தான் ராம் நோக்கின்றார். 1991 க்குப் பின்னரான கால கட்டத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகள் தங்களை வலுப்படுத்திக் கொண்டதை தனது உரையின் பல இடங்களில் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இலங்கை அரசியலின் ஒவ்வொரு நிகழ்வுப் போக்கிலும் உள்ள நுண்ணிய அம்சங்கள் மீதெல்லாம் அக்கறை காட்டுகின்ற ராம், இலங்கை இன நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான தற்போதைய சமாதான முயற்சிகளில், பேச்சுவார்த்தைகளில் இந்தியா எந்தவிதத்திலுமே பங்குபற்ற முடி யாதென்பதை தெட்டத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்தியாவில் ஒரு பயங்கரவாத இயக்கமாக விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்டி ருப்பதே இதற்குக் காரணம் என்று காரணம் கற்பிக்கும் ராம், அந்த விவகாரத்தில் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்வதற்கு இந்தியா தயாரில்லை என்பதைப் பிரகடனம் செய்கிறார். விடுதலைப்புலிகள் என்னதான் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றிருந்தாலும், மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு அக்கறை கொண்டிருப்பதாகக் கூறிக் கொண்டாலும் நாட்டுப் பிரிவினை என்ற அடிப்படை நிலைப்பாட்டில் இருந்து அவர்கள் விலகவேயில்லை என்று உறுதிப்படக் கூறுகிறார் ராம்.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் இருந்து இந்திய அமைதிகாக்கும் படை வெளியேறியதற்கு பின்னரான கால கட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் சீரடைந்ததன் விளைவாக வளர்த்தெடுக்கப்பட்ட பொருளாதார உறவுகள் குறித்து தனதுரையில் ராம் பெருமளவுக்கு குறிப்பிட்டி ருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடுத்ததாக இலங்கையுடன் பெருமளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபடும் நாடாக இலங்கை இன்று விளங்குகிறது. இலங்கையில் கணிசமான இந்திய முதலீடு இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளின் மேம்பாட்டிற்கு ஐக்கிய தேசியக் கட்சி செய்த பங்களிப்பை ராம் வெகுவாகப் பாராட்டுகிறார்.

இதற்காக ஐ.தே.க. வையும் ரணிலையும் பாராட்டும் 'இந்து" பிரதம ஆசிரியர், சமாதான முயற்சிகள் தொடர்பில் இன்று ஐ.தே.க. எடுத்திருக்கும் நிலைப்பாட்டை வரவேற்கவில்லை. விடுதலைப் புலிகள் முன்வைத்திருக்கும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளின் அடி ப்படையில் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்; அதற்கு பரிபூரண ஆதரவு அளிக்கத் தயார் என்று, ஐ.தே.க. செய்திருக்கும் பிரகடனம் ராமின் மனதுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுபோலும். ராமின் பேச்சு முழுவதிலும் ஒருவரியைத் தவிர தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகள் - உரிமைகள் பற்றி அவர் எதையுமே பேசவில்லை.

விடுதலைப் புலிகளின் எந்தக் கோரிக்கைக்குமே இணங்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதில் அதீத அக்கறை காட்டிய ராம், அத்துடன் நின்றுவிடாமல், இலங்கையின் வடக்கு, கிழக்கின் நிலைவரங்களில் அடிப்படையில் தளமாற்றம் ஏதாவது இடம்பெறுமானால், இந்தியாவின் தற்போதைய இலங்கைக் கொள்கை தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுகிறார். அத்தகைய, அடிப்படை மாற்றம் எதுவுமே நிகழுமானால், இந்தியா பார்த்துக் கொண்டி ருக்காது என்று தென்னிலங்கைச் சிங்கள அரசியல் சமுதாயத்துக்கு ராம் தெம்பபூட்டுகிறார்.

இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும், பாக்குநீரிணையில் கூட்டு ரோந்தில் ஈடுபடவேண்டுமென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் யோசனைக்கு ராம் தனது பரிபூரண ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை இனநெருக்கடி, தொடர்பில் தமிழகத்தில் எந்தவித உணர்வு நிலைமாற்றமும் ஏற்படுவதற்கில்லை. தென்னிலங்கை அது குறித்து அஞ்சவே தேவையில்லை என்றும் ராம் தெம்பூட்டுகிறார். ஒருசில குழுக்களும் தமிழுணர்வு அரசியல் இயக்கங்களுமே குரலெழுப்புகின்றன. மற்றும்படி இலங்கைத் தமிழர் சார்புப் போக்கு என்பது தமிழகத்தில் இல்லை என்று கூறும் ராம், தனது பேச்சு முழுவதிலுமே இலங்கை அரசுக்கும் அரசுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய கட்சிகளுக்குமே தனது செய்தியை எடுத்துணர்த்துகிறார்.

தமிழகத்தில் திராவிட இயக்கம் வலுவிழந்த சூழலில், தமிழக அரசியல் சமூ கத்துக்கும் இலங்கையில் உள்ள தமிழ் இயக்கத்துக்கும் இடையேயான தொடர்பின் தற்போதைய நிலை குறித்த ராமின் கருத்துக்கள் வெறுமனே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடா? அல்லது திராவிட இயக்கங்களை அவற்றின் அடிப்படை உணர்வுப் போக்குகளில் இருந்து வலுவிழக்கச் செய்து விட்டதில் தமிழகப் பிராமணியத்தின் வெற்றி எக்காளமா? தமிழகத்தில் தமிழுணர்வு இல்லை என்பதை சிங்கள அரசியல் தலைமைத்துவங்களுக்கு சொல்லி வைக்கிறார் ராம். இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்துபேசுபவர்கள் தமிழகத்தில் சக்திமிக்கவர்களாக இல்லை என்பதை ராம் கொழும்பில் பிரகடனம் செய்கிறார்.

தனது உரையில் ஒரு கட்டத்தில் ராம், இந்திய அரசுக்கு காஸ்மீர் விவகாரத்தில் எவ்வாறு விட்டுக் கொடுக்க முடியாதோ இதேபோன்றே இலங்கையின் வடக்கு, கிழக்கு விவகாரத்திலும் இலங்கை அரசுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்ற வகையிலான கருத்தை அழுத்தியுரைக்க முயற்சித்ததைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இவற்றையெல்லாம் சொல்லும் ராம், உலகத் தலைவர்களின் தலைவன் என்று தனக்கு முடி சூடிக் கொள்ள ஆசைப்படும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு. கருணாநிதியின் நல்ல நண்பர். ராமின் கொழும்பு உரை குறித்து தமிழ்நாடு எந்த விதமான பிரதிபலிப்பைக் காட்டப் போகிறது? வைகோ, ராமதாஸ் என்ன சொல்லப்போகிறார்கள்?உண்மையிலேயே ராம், இந்தியாவுக்காகப் பேசுகின்றதைப் போலக் காட்டிக்கொண்டு, இலங்கை அரசுக்கும், அரசுக்கு வரக்கூ டிய கட்சிகளுக்கும் அறிவுரை கூறுவதைப் போன்று காட்டிக் கொண்டு, இலங்கைத் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை அமுக்கும் நோக்கிலேய தனது குரலை ஒலிக்கிறார்.
இத்தனைக்கும் இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.


கடந்த ஆகஸ்ட்டில் இலங்கைக்கு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியற்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி பொன். கந்தையா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்திய போது 'ஐக்கிய இலங்கைக்குள் சிறுபான்மையினங்களுக்கு குறிப்பாக தமிழ்பேசும் மக்களுக்கு கூடுதல்பட்ச சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடு" என்று குறிப்பிட்டார். ராமின் உரையை நோக்கும்போது, அவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரா என்று கேள்வி எழுகிறது.

இலங்கை விவகாரத்தில் பத்திரிகைத்துறைக்கு அப்பால் எத்தனையோ, மைல்களைக் கடந்து சென்று இலங்கை அரசியல் அதிகாரவர்க்கத்தின் உற்ற நண்பனாகச் செயற்படும் ராம் யாருடைய குரல் -இந்திய அரசின் குரலா? இந்துப் பத்திரிகையின் குரலா? திராவிட இயக்கத்தைச் சீரழித்து விட்டதால் பெருமிதம் கொள்ளும் தமிழகப் பிராமணியத்தின் குரலா? அல்லது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தும் பிராமணக் குழுவின் குரலா?

நன்றி:- தினக்குரல்

Sunday, October 17, 2004

ஆனந்தசங்கரிக்கு தன்மானத்தமிழனின் மடல்

அன்புடன் ஆனந்தசங்கரி!

தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நீங்கள் கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகப் பத்திரிகை களில் வாசித்து அறிந்தேன்.பொதுத்தேர்தல் படுதோல்வியோடு, வெளிநாட்டுச் சுற்றுலா என்ற பெயரில் இங்கிலாந்து போன நீங்கள், மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி பெயரிலான கடிதத் தலைப்போடு உங் கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட் டீர்கள்.வெளிநாட்டில் ஏந்திய கைகளுக்குக் கிடைத்த சன்மானத்துக்கு கைமாற்றாக அங்கு ஏவப்பட்ட பணியை நீங்கள் ஆற்றுகின்றீர்கள் என்பது எங்களுக்குப் புரிகின்றது.

தலைவர் பிரபாகரனுக்கு அரசியல் விவகாரங் களில் ஆலோசனைக் கடிதம் வரையும் தகுதி யும், தைரியமும் உங்களுக்கு உள்ளதாக நீங் கள் கருதும் நிலை இருப்பது ஈழத்தமிழர்களின் துரதிஸ்டமேயன்றி வேறில்லை.கருணா என்ற தனிமனிதப் பிறழ்வுடன் - நம்பிக்கைத் துரோகியுடன் - ஒரு விடுதலைப் போராட்டத் தலைவரை இணங்கிப்போக ஆலோ சனை கூறுகின்றீர்கள்.கருணாவின் தரத்தில் இருக்கும் உங்களுக்கு ஜாரியான கருணாவுடன் நீங்கள் இணங்கிப் போவதன் வெளிப்பாடே இக்கோரிக்கையன்றி வேறில்லை.கருணாவின் கழுத்தில் விழக்கூடிய யமனின் பாசக் கயிற்றிலிருந்து கருணாவை விடுவித்தால், உங்கள் பக்கமும் யமனின் வருகை இருக்கும் என்ற பயத்திலிருந்து நீங்கி விடலாம் என நப்பாசை கொள்கின்றீர்கள் போலும்.

ஜயா சங்கரியாரே!
இப்போது நீங்கள் அரசி யலில் போக்கிடமற்ற அநாதை, வெறும் துரும்பு. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கடிதத் தலைப் புத் தவிர, உங்களுக்குத் தடுப்புச்சுவர் வேறேது மில்லை. எனவே, உங்களுடன் மினக்கெடுவதற்கு புலிகளுக்கு தேவையோ, அர்த்தமோ, நேரமோ இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எனவே, பயமின்றி உங்கள் பித்தலாட்டத்தை நீங்கள் தொடருங்கள், என்ன வேடிக்கை மனிதர் இவர்! என்று ஒரு விதூகனைப் பார்த்து, அனு பவிக்கும் வாய்ப்பு தமிழருக்குத் தொடரட்டும்.

கருணாவைப் போன்று பல துரோகங்களைத் தமது விடுதலைப் போராட்டத்தில் கண்டவர் தலைவர் பிரபாகரன், அந்தத் துரோகத் தூசு களின் பட்டியலில் மற்றொரு தூசாக வலம் வரும் தாங்கள், விடுதலை வேள்வியின் தாற் பரியம் புரியாமல் உங்களின் குள்ளநரித்தன மான அரசியலின் அங்கமாக அதைக் கருதி தத்துவம் பேச முனைகின்றீர்கள்.நீங்கள் கேட்பதை சிங்களவர்களும், முஸ் லிம்களும் தருவார்களா? என்று தலைவர் பிரபாவிடம் நீங்கள் உங்கள் கடிதத்தில் கேட் பதில் விந்தையில்லை.ஏனென்றால் கேட்டும், இரந்தும் பெறும் பிச்சைதான் உரிமை என நினைப்பவர் - கருதிச் செயற்படுபவர் - நீங்கள்.

இந்தியாவிடமும், பிற ஈழத்தமிழர் விரோத சக்திகளிடமும் ஏந்திப்பெற்ற பிச்சைக்காக நீங்கள் அப்படித்தான் கேட்க வேண்டும். வேறு வழியில்லை. நீங்கள் கேட்பதற்கு உடன்படும் ஏதேனும் அரசு, அதன்பின் பதவியில் நிலைக்கமுடியுமா? என்று தலைவரைப் பார்த்து வினாவுவதன் மூலம் அவர்கள் தரக்கூடியதை மட்டும் கேளுங் கள் என்கிறீர்கள்.
நல்லது. சங்கரி ஐயோவே! கடந்த ஐம்பது ஆண்டு காலம் ஈழத்தமிழரை ஏமாற்றி, நீங்களும் உங்களைச் சார்ந் தோரும் நாடாளுமன்றை அலங்கரிப்பதற்காக காலத்துக்குக்காலம் முன்வைத்த கோரிக்கை கள் எவையேனும் அவ்வப்போது இருந்த அரசு களால் நிறைவேற்றப்பட்டனவா? தரப்பட்டனவா? அவை தரமாட்டா என்பதற்காக நீங்கள் கேட்காமல் விட்டீர்களா? இடைக்கால நிர்வாகமே இன்று எட்டமுடியாது என்று இப்போது கூறும் நீங்கள் தானே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன் னர் தனித் தமிழீழம் என்று பெரும் கதை அளந்தீர் கள். 2001 தேர்தல் வரை அதே கயிற்றை அவிழ்த்து விட்டீர்கள்.

தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிக ளையும் பொறுத்தவரை ஈழத்தமிழர்களுக்கு நியா யமானதை அவர்கள் கேட்கிறார்கள். கொடுக்க வேண்டியது அரசின் கடமை. தவறினால் பிடுங்கி எடுக்கவும் முடியும்; எடுக்கவும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அதை அவர்கள் கேட் கின்றார்கள்.இப்போது உயிரிழப்புப் பற்றி நீலிக்கண் ணீர் வடிக்கும் நீங்கள், அடுத்த மேதினம் தமி ழீழத்தில்! என்ற நிறைவேற்ற முடியாத விவ காரத்தை உங்களின் அந்நேரத் தலைவருடன் சேர்ந்து தமிழ் மக்களின் காதில் பூச்சுற்றலா கச் சுற்றிப் பேய்க்காட்டிய போது ஒரு தடவை சிந்தித்திருக்கலாம்.

உங்களைப்போன்று வாக்குகளுக்காக மணலைக் கயிறாகத் திரிக்கும் வாக்குறுதிகளை அவிழ்த்து விடுபவர்களல்லர் புலிகள்.சொன்னதைச் செய்யவும், செய்வதைச் சொல் லவும் திராணியும், வீரமும், வலுவும் பொருந்திய விடுதலைப் போராளிகள் அவர்கள்.அவர்கள் வெற்றுவேட்டு அரசியல்வாதிகளாக நினைத்து நீங்கள் பிரபலாபிப்பது உங்களின் அறியாத்தனத்தைக் காட்டுகிறதே அன்றி வேறில்லை.உங்கள் கடிதத்தில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமாக நீங்கள் முதலைக் கண் ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கின்றது.இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை பற்றிய புலிகளின் திட்டம், இலங்கை அரசு பரிசீலிக்கக்கூடிய ஒன்றல்ல என்றும் நீங்கள் கூறியிருக்கின்றீர்கள்.

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னரே இந்த யோசனையைப் புலிகள் முன்வைத்து விட்டனர். அதுமட்டுமல்ல, அந்த யோசனையை தேர்தலில் ஒரு பிரேரணையாக முன்வைத்தே ஈழத்தமிழர் களின் பிரதிநிதிகள் போட்டியிட்டு தமிழ்மக் களின் ஏகோபித்த ஆதரவோடு தெரிவானார் கள். இந்தத் தன்னாட்சி அதிகாரசபை யோசனை ஈழத் தமிழர்களால் வாக்கெடுப்பு மூலம் அங் கீகரிக்கப்பட்ட ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள். இன்று, அதற்கு நீங்கள் கொடுக்கும் பொருத்த மற்ற வியாக்கியானத்தை - தேர்தலுக்கு முன்னர் நீங்கள் கொடுத்திருப்பீர்களேயாயின், கடந்த பொதுத்தேர்தலில் உங்களுக்கு கிடைத்த ஐயாயி ரம் வாக்குகளும் ஐநூறாகியிருக்கும். தப்பி விட்டீர்கள் போங்கள்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்திய அரசமைப்பு மாதிரியில் தீர்வு என்பது பற்றியும் உங்கள் கடிதத்தில் கூறியிருக்கிறீர்கள். இந்தியத்தரப்பு வீசிய எலும்புக்கு நன்றியாக இதை யாவது நீங்கள் கூறாவிட்டால் உங்களுக்கா கத் தொடர்ந்து வேறு யார்தான் இருப்பார்கள்? எனவே, இனத்தை விற்றாவது உண்ட வீட்டுக்கு நன்றி செய்ய முயல்கிறீர்கள். வாழ்க உங்கள் நன்றிமறவாப் பண்பு!வீரர்களோடுதான் எட்டப்பர்களும் வளர்ந் தார்கள். அதுதான் சரித்திரம் நமக்குத் தரும் கடந்தகால அனுபவம்.தந்தை செல்வாவுடனும், ஜீ.ஜீ.பொன்னம்பலத் தோடும் உறவாடிப் பழகியதை நீங்கள் உங்க ளுக்குச் சான்றிதழாகப் பட்டியலிடும்போது எட்டப் பர் கதைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

இறுதியாக, நாம் பழைய விடயங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதை நிறுத்த வேண் டும் எனத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கின்றீர்கள்.அப்படிப் பேசுவதை நிறுத்தினால், உங்கள் துரோகச் செயல்களும் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்று எண்ணுகிறீர்;கள் போலும்.எத்தனை தடவை நீங்கள் மண்டியிட்டாலும் நீங்கள் புரிந்தசெயல்கள் - அதுவும் நீங்கள் அலங்கரித்த பதவி, உங்களுக்குத் தமிழினம் தந்த மரியாதை மற்றும் பொறுப்பு - ஆகியவற் றுக்கு மத்தியில் நீங்கள் செய்த வேலைகள், வரலாற்றில் என்றும் உங்களுக்கு மன்னிப்புத் தர இடமளிக்கா என்பதே உண்மை.

பிராயச்சித்தமே செய்யமுடியாத வகையில் பிழைமேல் பிழை - தவறு மேல் தவறு - புரிந்துவரும் நீங் கள், உங்களைப் பொறுத்தவரை ஆனந்தசங்கரி யாக இருக்கலாம். ஆனால், ஈழத்தமிழருக்கு துக்க சங்கடமே!

அன்புடன் தன்மானத் தமிழன்.

Sunday, October 03, 2004

ஈழத்தின் அழகு.

ஈழத்தின் அழகு தனி அழகு.

வந்திட்டேன்!


சில வாரங்களாக எனக்கும் இணையத்துக்குமான தொடர்பு முற்றாக அறுந்து
போய் இருந்தது சில காரணங்களால் .பத்திரிகைககள் ,புதினங்கள் ஒன்றும்
அறிய முடியாமல் எதோ ஒன்றை இழந்தது போல ஒரு உணர்வு.

நேற்றில் இருந்து மீண்டும் இணையத்துடன் தொடர்பு.
இனி எனது பதிவில் தொடர்ந்து நான் எழுதுவேன்.நான் ஒன்றும் எழுத்தாளன்
அல்ல. எனது மனதில் எழும் கருத்துக்கள் , நான் வாசித்தவைகள், கேட்டவைகள், என்னைப் பாதித்தவைகள்
இவற்றினையே "என் மனவெளியில்"மூலமாக பகிர்ந்து கொண்டேன்.இனியும்
பகிர்ந்து கொள்வேன்.

மீண்டும் சந்திக்கிறேன்.
அன்புடன் கரிகாலன்

Monday, September 06, 2004

37 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வாழ்த்து மடல்


சில வேளைகளில் நடைபெறும் சில சம்பவங்கள் மனிதர்களை இன்ப அதிர்ச்சிக்குள் கொண்டுபோய் விடும்.அப்படிப் பட்ட ஒரு
சம்பவம் அமெரிக்காவில் வதியும் ஒரு தாய்க்கு கிடைத்திருக்கிறது. சம்பவம் இதுதான்.

37 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தில் விடுமறையைக் கழித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது தாயாருக்கு
அனுப்பிய வாழ்த்து மடல் 37 ஆண்டுகளின் பின்னர் அண்மையில் தாயாரிடம் சென்றடைந்திருக்கிறது.

ஓகஸ்ட் 19,1967 எனும் திகதியிடப்பட்ட இத் தபால் நியூஜேர்சி தபால் நிலையத்தில் தபால் தரம் பிரிக்கும் இயந்திரத்துக்கு பின்னால்
விழுந்துவிட்டது.சென்ற ஜூலை மாதம் மேற்படி இயந்திரத்தினை அகற்றி புது இயந்திரத்தினை பொருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட
தபால் ஊழியர்களால் மேற்படி தபால் கண்டெடுக்கப்பட்டது.

வெறும் 4 சதம் முத்திரை ஒட்டப்பட்டிருந்த தபாலுக்கு மேலும் 23 சத முத்திரை ஒட்டி உரிய முகவரிக்கு அனுப்பி வைத்தனர்
தபால் ஊழியர்கள்.37 ஆண்டுகளுக்கு முன்னர் மகள் அனுப்பிய வாழ்த்து மடல் ஜூலை 14,2004 ல் பெற்றுக் கொண்ட தாயார்
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப்போயிருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர் தனது மகிழ்ச்சியில் பெரும் பங்கு
தபால் ஊழியர்களையே சாரும் எனத் தெரிவித்து இருக்கிறார்.

இதில் என்ன ஆச்சர்யம் எங்கள் நாடுகளில் தபால்கள் தொலைவதும்,பிந்திக் கிடைப்பதும் சர்வசாதாரணம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

Sunday, September 05, 2004

கனடாவில் பொங்கு தமிழ் நிகழ்வுகள்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அதிகளவில் தமிழர்கள் வாழும் (3,00,000) நாடாக கனடா விளங்குகிறது. இங்கு வாழும் பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த்த பல்வேறு இனக் குழுக்கள்தமது மொழி,பண்பாடு,கலை கலாச்சாரங்களை பேணிவருவதுடன் தமது இன அடையாளங்களைபேணிவருவதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கனடாவில் வாழும் ஈழத்தமிழர்கள் இங்கு "தமிழ் கனேடியர்" என்றே தம்மை அடையாளப்படுத்தி வருகின்றனர்.அந்த்த வகையில் தமது இருப்பை அடையாளப்படுத்தும் ஒன்றாகவே இப்பொங்கு தமிழ் நிகழ்வை கனடா தமிழ் மாணவர் அமைப்பு கனடாவில் உள்ள சகல பொது அமைப்புக்கள், மற்றும் ஊடகங்களின் ஆதரவுடன் இப் பொங்குதமிழ் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

வலுவான ஒரு சமுதாயமாக,ஒரே தலைமையின் கீழ் தம்மைப் பிரகடனப்படுத்துவதுடன் ,தாயகத்தில்இருக்கும் தொப்பிழ்கொடி உறவுகளுடனான உறவை வலுப்படுத்துவதுடன், இலங்கையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்க வேண்டிய கடப்பாடு கனடா தேசத்துக்கு உண்டு என்பதுடன் தமிழர் தேசியம்,தமிழர் தலைமை,தமிழர் தாயகம்,தமிழரின் சுயநிர்ணயம் போன்ற பொங்கு தமிழின் அடிப்படைகளை வலியுறுத்தும் ஒரு தமிழ் தேசிய நிகழ்வாகவும் இப் பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

இம் மாதம் 25 ம் திகதி பாராளுமன்றத்திற்கு முன்பாக உள்ள "குயின்ஸ் பார்க்"எனும் இடத்தில் இன் நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்புக்கள் இங்கு வெளிவரும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் வானொலிகள் மூலம் வெளியிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.பெருமளவுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tuesday, August 31, 2004

குழந்தைகளும் கேள்விகளும்............

குழந்தைகள் உள்ளவர்களுக்கு தெரியும் குழந்தைகளின் கேள்வி கேட்கும் தன்மை பற்றி. என்னத்தில்,எங்கு சந்தேகம் வரும் என்று இல்லை. இடக்கு முடக்காக கேட்பார்கள்.தாய் தந்தையர் பதில் சொல்ல முடியாமல் சில வேளை திண்டாட வேண்டி வரும். இதுவும் அப்படிப்பட்டதுதான்.

தனது நாய் இறந்து விட்டதுக்காக அழுதுகொண்டிருக்கும் சிறுவனை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார் "தம்பி எனது தாத்தா இறந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது நான் என்ன அழுது கொண்டா இருக்கிறேன் எழும்பி வேலையைப் பார் என்று"

அதற்கு அந்த சிறுவன் கேட்டான் ஒரு கேள்வி "நீங்கள் உங்கள் தாத்தாவை சிறுவயதில் இருந்தா வளர்த்தீர்கள்"? என்று?

சிறுவனுக்கு புத்தி சொன்ன பக்கத்து வீட்டுக்காரர் சப்தம் போடாமல் நகர்ந்துவிட்டார்.வாயையும் "எதையுமோ"பொத்திக்கொண்டு.

இது நேற்று டாக்டரிடம் போனபோது காத்திருந்த வேளையில் பத்திரிகையில் படித்தது.சரி நீங்களும்ரசிப்பீர்கள் என்பதற்காக தந்திருக்கிறேன் இங்கு.

Monday, August 23, 2004

உலகமுட்டாள்களுக்கான உயர்விருதுகள்-2004

ண்மையில் கனடாவில் இருக்கும் Lust For Laughs எனும் அமைப்பு மொன்றியல் நகரில் நடத்திய Comedy Festival இல் பல்வேறு தலைப்புக்களில் 2004 ம் ஆண்டிற்கான உலக முட்டாள்களை தெரிவுசெய்துள்ளது. உலகின் தலைசிறந்த முட்டாள்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முட்டாள்தனமான முயற்சிகளுக்கான உயர் வாழ்நாள் விருதினைப் பெறுகிறார் : சதாம் உசைன்


உலகின் மிக மோசமான முட்டாள்: ஜோர்ஜ் புஷ்


உலகின் மிக மோசமான முட்டாள் அரசு: அமெரிக்க அரசு


உலகின் முட்டாள் ஊடகம்: Fox news


பொறுப்பற்ற ஆபத்தான உலக முட்டாள்கள் விருது (இருவருக்கு): ஜோர்ஜ் புஷ் மற்றும் ரொனி பிளையர்


மோசமான முட்டாள் திரைப்படம் : Passion Of The Christ மற்றும் Gigli


மோசமான முட்டாள் அறிக்கை: "ஈராக் மீதான மிக முக்கிய தாக்குதல்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவி ட்டன" - அறிவித்தவர் ஜோர்ஜ் புஷ்

தெரிவு செய்யப்பட்டவைகளில் முக்கியமானவை இவை. இவை தவிர ஒவ்வொரு விருதுக்கும் பிரேரிக்கப்பட்டவர்களின் விபரங்கள், மற்றும் மேலதிக தகவல்களுக்கு இங்கு செல்லவும்.


Saturday, August 21, 2004

‘‘இந்திய ராணுவமே.. மனோரமாக்களை விட்டுவிடு!’’

னி எங்களுக்கு ஆடைகள் வேண்டாம். எங்கள் பெண்கள் கற்பழிக்கப் படுவதும், கொல்லப்படுவதும் சர்வ
சகஜமாகிவிட்டபோது எதற்காக நாங்கள் உடலை மூடி மறைக்க வேண்டும்? எங்கள் கண்ணியமும், கவுரவமும்,
மானமும் காற்றில் பறக்க விடப்படும்போது ஒப்புக்கு ஆடை எதற்கு?


இந்திய ராணுவமே... வா, வந்து எங்கள் கற்பை சூறையாடு. எங்களைக் கொன்று சதைகளை அள்ளிக் கொள்.
ஆனால், மனோரமாக்களை விட்டுவிடு! மனோரமாவின் அம்மா ஸ்தானத்திலிருந்து நாங்கள் மன்றாடி
கேட்கிறோம்’’ சமீபத்தில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவு
அலுவலகத்தின் வாசலில், ஒரு டஜன் மணிப்பூரி பெண்கள் கூடி நின்று எழுப்பிய கோஷம் இது.

இந்திய ராணுவத்தைக் கண்டித்து எழுதப் பட்ட வாசகங்கள் அடங்கிய துணி பேனர்களைக் கையில் பிடித்தபடி
நின்றிருந்த அவர்கள் உடலில் ஒட்டுத் துணிகூட கிடையாது. முழு நிர்வாணம்!

மனோரமா..

நம் கலாசாரத்தின் தலையில் தடியால் அடிக்கும்படி, ஒட்டு மொத்த இந்தியாவும் அதிர்ச்சியில் உறையும்படி ஏன்
இப்படியொரு போராட்டம்? கட்டிய கணவன் எதிரில்கூட ஆடை களைந்து நிற்க கூசும் பெண்களை, பலர்
முன்னிலையில் இப்படி பிறந்த மேனியாய் நிற்க துணிந்து முன்வரச் செய்தது எது?

இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்த இந்தப் போராட்டத்துக்குக் காரணம் முப்பத்திரண்டு வயது மனோரமாதேவியின் கொடூர மரணம்!
கடந்த ஜூலை 10ம் தேதி இரவு மனோரமாவின் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்தது இந்திய ராணுவம்.
மனோரமா, தலை மறைவுத் தீவிரவாத இயக்கம் ஒன்றின் கமாண்டோ என்று உளவுத்துறை ரிப்போர்ட்
கொடுத்திருப்பதாக அதற்கு காரணம் சொன்னது.

மனோரமாவின் வயதான அம்மாவும், இரண்டு தம்பிகளும் ஹாலில் இருக்க, அவர்கள் கண்ணெதிரிலேயே
படுக்கையறையில் புகுந்த ராணுவத்தினர், மனோரமாவைத் தரதரவென இழுத்துவந்து, தாழ்வாரத்தில் கிடத்தி இருக்கிறார்கள்.
அதன் பிறகு மனோரமாவின் அலறல் சத்தம் மட்டுமே கேட்டிருக்கிறது. மூன்று மணி நேர சித்ரவதை... தாங்க
முடியாமல் மனோரமா மயங்கி விழ, பிறகும் தொடர்ந்திருக்கிறது கொடூர இம்சை. நடுவில்,
சமையலறையிலிருந்து கத்தியை எடுத்து சென்றிருக்கின்றனர். அதைத் திரும்பவும் கொண்டுவந்து வைத்தபோது, கத்தி முழுக்க ரத்தம்!

அதிகாலை மூன்று மணிக்கு, மனோரமாவை கைது செய்திருப்பதாகச் சொல்லி, அவரை இழுத்துச் சென்றிருக்கிறது இந்திய ராணுவம்.
இரவில் பெண்களைக் கைது செய்யக் கூடாது, பெண்கள் விசாரிக்கப்படும்போது கூடவே ஒரு பெண்
அதிகாரியாவது இருக்க வேண்டும் என்ற விதிகளை எல்லாம் தூக்கி தூரப் போட்டுவிட்டு அவர்கள் இழுத்துச்
சென்ற மனோரமா, மறுநாள் பக்கத்துத் தெருவில், ரோட்டோரப் புதரில் அரைகுறை ஆடைகளுடன் பிணமாகக் கிடந்திருக்கிறார்.

உடல் முழுக்கக் காயங்கள்... அந்தரங்க இடங்களில் நகக்கீறல்கள்... தொடையில் கத்தியால் வெட்டிய ஆழமான
காயம்... முதுகில் ஐந்து இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த அடையாளம்... என்று ரத்தக் களறியாக,
மனோரமா உயிரை விட்டிருந்த அந்த கொடூரத்துக்கு காரணம் ராணுவம் என்று மனோரமாவின் குடும்பம் கதற,
அவர் பயங்கரத் தீவிரவாதி. வெடிகுண்டு, ஏ.கே.47 துப்பாக்கி, வயர்லெஸ் எல்லாம் வைத்திருந்தார். அவரைக்
கைது செய்தபோது தப்பியோட முயன்றார். அதனால் சுட்டோம்! என்றது ராணுவம்.

மனோரமா சடலமாக..

ஆனால், அதை நம்பத் தயாராக இல்லை மக்கள். சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவரும்
இதேபோல ராணுவத்தால் சீரழிக்கப்பட்டு, தற்கொலை செய்துகொண்டார். அப்போதுகூட அமைதி காத்த
மணிப்பூர், இப்போது பொறுக்க முடியாமல் பற்றி எரிகிறது!

மணிப்பூரில் பதினைந்துக்கும் மேற்பட்ட தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன. இவர்களைச் சமாளிப்பதற்காக
இங்கே வரவழைக்கப்பட்டதுதான் ராணுவம். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்படி ராணுவம்
சந்தேகத்தின்பேரில் யாரையும் கைது செய்யலாம், விசாரிக்கலாம். அதை எவரும் கேள்வி கேட்க முடியாது!
ஆனால், இந்தச் சட்டம் தீவிரவாதிகளை ஒடுக்குவதைவிட, அப்பாவிகளை சித்ரவதை செய்யத்தான் அதிகம்
பயன்பட்டதாக மணிப்பூர் மக்கள் குமுறுகின்றனர்.

இருபத்துநான்கு வருடங்களாகத் தீவிரவாதிகளை ஒழிக்க
முடியாதபோது, எதற்கு இந்தச் சட்டம்? எதற்கு ராணுவம்? என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த மணிப்பூர்
மக்கள், மனோரமாவின் மரணத்துக்குப்பிறகு, இந்தச் சட்டத்தை உடனே நீக்கவேண்டும் என்று ஆவேசக்
குரலோடு ஆர்ப்பாட்டத்தில் இறங்கிவிட்டனர். அதில் ஒன்றுதான் நிர்வாண போராட்டம் (இதனால் மிரண்டுபோன
ராணுவம், மனோரமா விவகாரத்தில் தவறுகள் நடந்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது).

இந்தப் போராட்டத்துக்கு தலைமை ஏற்றிருப்பது, "மீரா பைபி" (meira paibi"-தீப்பந்தம் ஏந்திய பெண்கள்) என்ற
பெண்கள் அமைப்பு. இதன் பொதுச்செயலாளரான தோக்கம் ரமணி (இவருக்கு வயது 70!).
எங்கள் பாதுகாப்புக்காக என்று வரவழைக்கப்பட்ட ராணுவத்தால்தான் எங்கள் பாதுகாப்பே பறிபோய்விட்டது.
எங்கள் இயல்பு வாழ்க்கையையும், நிம்மதியையும் தொலைத்துவிட்டோம். எங்கள் இளைஞர்கள் என்கௌண்ட்டர்
என்ற பெயரில் தினம் தினம் கொன்று வீசப்படுகிறார்கள். பெண்களின் கற்பையும் உயிரையும் கடைச் சரக்காக்கிவிட்டது ராணுவம்.

இதையெல்லாம் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சகிப்பது? இனியும் சும்மா இருந்தால் எங்களின் அடுத்த
தலைமுறை அடியோடு அழிந்துவிடும். அதை மீட்டெடுக்கத்தான் நாங்கள் போராடுகிறோம். இதனால் எங்களுக்கு
என்ன இழப்பு ஏற்பட்டாலும் கவலையில்லை! அதிகபட்சம் உயிரை எடுப்பார்கள், அவ்வளவுதானே?’ என்கிறார் ஆவேசமாக.

ராணுவத்தை வெளியேறச்சொல்லி, அதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவும் வைத்திருக்கும் இந்த ஆவேசத்
தாய்மார்களின் பின்னால் மொத்த மணிப்பூரும் அணிவகுத்து நிற்க, இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்க, திகைத்து நிற்கிறது அரசாங்கம்.

இது 27.08.04 அவள் விகடன் இதழில் வந்த மணிபூர் நிலவரம் தொடர்பான கட்டுரை.

Wednesday, August 18, 2004

கவிதை சமுத்திரத்தில் இதோ ஒரு புதிய துளி

விதை சமுத்திரத்தில் இதோ........இன்னும் ஒரு சிறு துளி எனும் தலைப்பில்
"எனக்குள் ஊற்றெடுக்கும் உணர்வுகள் மொழிவடிவம் பெறவேண்டும்.அவை மக்களோடு மக்களாக கலந்திடவேண்டும். என்னைச் சுற்றியிருக்கும் என் சமுகத்தில் ஒரு சிறு துடிப்பையேனும் உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே நான் எழுதுகிறேன்."
என்னும்
முன்னுரையுடன் கவிதைகளுக்கான ஒரு தளத்தினை ( www.sharishonline.com/)
தமிழ் ஓசை.கொம் வாயிலாக சில தினங்களுக்கு முன்னர் அறிய முடிந்தது. நல்ல பல கவிதைகள், புரட்சி, சமூகம், காதல், போன்ற தலைப்புக்களில் இடம் பெற்றிருக்கிறது. அத்துடன் புதுக்கவிதைகளுக்கும் இடம் கொடுத்திருக்கிறார் இந்த இளவயதுக் கவிஞர் இந்த தளம் மற்றும் கவிதைகளுக்கு சொந்தக்காரர் திரு த.சரீஷ் எனும் கவிஞன். புலம் பெயர்ந்த ஒரு கவிஞர் என்பதனை அவரின் கவிதை வாயிலாக அறிய முடிந்தாலும் அவர் எந்த நாட்டில் வசிக்கிறார் என்பதை அறிய முடியவில்லை

தள வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருப்பதுடன் யுனிகோட் எழுத்துருவில் தளத்தினைக் காணமுடிகிறது. தளத்தில் சில இடங்களில் "மிக விரைவில் வரும் "எனும் வசனத்தினைக் காணமுடிந்தாலும் புதியதளம் தானே விரைவில் சரி செய்வார்கள் என எதிர் பார்க்கலாம். . கவிஞரின் கவிதை நூல்களின் விபரங்கள் தொகுக்கப் பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
ஒவ்வொரு தமிழ்மகனும்ஒவ்வொரு வரலாறு...!!! எனும் தலைப்பில் கவிதை கூறும் போது இடையில் சொல்கிறார்.

உயிருக்குப் பயந்து
ஊரைவிட்டு ஓடிவந்தேன்
எந்தன் வீடும் வீட்டுப் படிக்கட்டும்
முற்றத்து மாமரமும் புல்வெளியும்
©வரசம் ©வும் கோவிலும் குளமும்
கடற்கரையும் விளையாட்டுத் திடலும்
ஊர் நிலவும் உப்புக்காற்றும்
ஊரை விட்டு ஓடவில்லை
உயிருக்குப் பயந்து நான் மட்டும்
ஊரைவிட்டு ஓடி வந்தேன்
தன்மானம் இல்லாமல்
தாய்மண்ணை விட்டு
புலத்தில் வந்து புகுந்துகொண்டவன்
என்னை நீ பின்பற்றாதே..!

எனும் புலம் பெயர்ந்தவர்களுக்குரிய குற்ற உணர்ச்சியுடன்.

இன்னும் ஒர் கவிதையில் சொல்கிறார்.

சிங்கங்கள்
தேனீக்களை
போருக்கு
அறைகூவி
அழைக்கக்கூடாது-
ஏனெனில்தேனீக்களிடம்
கூர்மையானஆயுதம் உண்டு...!!!

நீங்களும் ஒரு முறை இந்தக் கவிதைகளைச் சுவைத்துவிட்டு இந்தக் கவிஞனுக்கு ஒரு வரி பாராட்டு தெரிவித்து விடலாமே.


Thursday, August 12, 2004

அமைதியை நிலைநாட்டும் வழிமுறைகளில் இதுவும் ஒன்றோ?



அன்று ஈழத்தில் எது நடந்ததோ அது இன்று நன்றாகவே நடக்கிறது மணிப்பூரில். நான் நினைக்கிறேன் மணிப்பூரிலும் ஒரு கையை முதுகுக்கு பின்னால் கட்டிக்கொண்டு அமைதியை நிலைநாட்டுகின்றனர் போலும்!

வாழ்க தீவிரவாத ஒழிப்புப் பணி!

வாழ்க தேசிய நீரோட்டம்!

வாழ்க ஜனநாயகம்!

Tuesday, August 10, 2004

இலங்கை; கிழக்கு மாகாண பதட்டமும், வல்லரசுகளின் சதிகளும்!

லங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவுகின்ற பதட்டமான சூழ்நிலையைப் பயன்படுத்தி ,தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழ் மக்களை அந்நியப் படுத்தும் நோக்குடன் இந்திய புலனாய்வுத்துறை உள்ளிட்ட சக்திகள் செயற்பட்டு வருவதாக கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற "சமாதான முயற்சிகளின் தடைகளும் உலக நாடுகளின் கொள்கை வகுப்புக்களும்" எனும் கருத்தரங்கின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை விரிவுரையாளரும், விமர்சகருமாகிய கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்து இருக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி அதன் மூலம் தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தினை நசுக்குவதே அந்நிய சக்திகளின் குறிக்கோளாக இருப்பதாகவும், மேற்படி இரு நோக்கங்களும் நிறைவேறியதும் தமக்கு சார்பானவர்களை பதவியில் அமர்த்தி இலங்கைத் தமிழர்களை இந்தியா பாதுகாக்கிறது எனும் ஒரு தோற்றப் பாட்டை ஏற்படுத்துவதே இந்தியாவின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் கருதி அமெரிக்கவும் ,இந்தியாவை போன்றே, இலங்கையின் வளங்களை, நலன்களை பயன்படுத்துவதற்கான வழி முறைகளைப் பிரயோகித்து வருவதாகவும், திருமலை எண்ணைக் குதங்களை இந்தியா குத்தகைக்கு பெற்றுக் கொண்டமை, அமெரிக்காவுக்கு திருகோணமலை துறைமுகம், விமானத்தளம் போன்றவற்றை பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட அனுமதி போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இரண்டு வல்லரசுகளுக்கும் சமமான நலன்கள் வழங்கப்பட்டிருப்பத்தையும் காணமுடியும் எனவும் கூறியிருந்தார்.

மேலும் இலங்கையில் போர் நடைபெறுவது அமெரிக்காவின் பிராந்திய நலன்களுக்கு ஆபத்தானது என்பதை புரிந்துள்ள அமெரிக்கா இலங்கையின் வடபகுதியில் இருந்து கிழக்கு பகுதியை தனிமைப் படுத்தி ஒரு தீர்வைக் கொண்டு வருவதின் மூலம் இந்து சமுத்திரம் மற்றும் ஆசியாவிலும் தனது கால்களை ஊன்றிக்கொள்ளமுயல்வதாகவும் திரு கே.ரி.கணேசலிங்கம் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்திய புலனாய்வாளர்கள் யாழ் குடாவில் வியாபாரிகள் எனும் போர்வையிலும், வன்னியில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடாகவும் ஊடுருவி இருப்பதாக அண்மையில் இலங்கைப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னாள் இந்திய இராணுவ வீரர்களை உறுப்பினர்களாக கொண்ட மேற்படி கண்ணிவெடி அகற்றும் இரண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள், தரம் பற்றி அதிருப்தி தெரிவித்த உலக வங்கியானது அவர்களுக்கான நிதி உதவியை வழங்க மறுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Thursday, August 05, 2004

இந்திய மைலாய் படுகொலை!



தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி புலிகளிடம் இருந்து
ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா
விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர்.

ஒரு நாளில் யாழ்ப்பாணத்தினைக் கைப்பற்றுவோம் என சொன்ன இந்திய அமைதிப்படையினர் யாழ்பாணத்தினைக் கைப்பற்ற 1 மாதம் எடுத்தது. யாழ்ப்பாணத்தினை கைப்பற்றிய பின்பு ஏனையபகுதிகளையும் கைப்பற்றிய இந்தியப் படைகள் 200 மீட்டருக்கு ஓன்று என்று ரீதியில் முகாம்களை அமைத்தது.புலிகளும் தமது பிரதான முகாம், தலைமை என்பனவற்றை வன்னிக்கு மாற்றிவிட்டு மற்றைய பகுதிகளில்
தமது குறிப்பிட்டளவு போராளிகளை நிறுத்தியிருந்தனர். தினமும் எதாவது ஒரு பகுதியில் போராளிகளைத்தேடும் இந்திய இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம் பெற்ற வண்ணமே இருக்கும்.



இப்படி தான் 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ந் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு ,பொலிகண்டி
இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்டனர் இந்தியப் படையினர். இந்த இந்திய இராணுவவீரர்களுக்கு தலைமை தாங்கியது. முறையே மேஜர் சுதர்சன் சிங்,.கப்டன் கோபாலகிருஸ்ன
மேனன் ,கப்டன் கபூர் என்போராவார்.இவர்களை எதிர் கொண்டு புலிகள் நடத்திய தாக்குதலில் 09 சீக்கிய சிப்பாய்கள் கொல்லப்பட ஆயுதம் தாங்கியபுலிகளை அழிக்க திராணியற்ற இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.

ஒகஸ்ட் 2 ந் திகதி இச் சம்பவம் நடைபெற 3,4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே ,அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை.வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று
பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.


  • 63 பொதுமக்கள் சுட்டும் ,வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர்.ஆண்,பெண்,முதியோர் வேறுபாடு இன்றி.
  • 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.
  • 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.
  • 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.
  • வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது,பல ஆயிரக்கணக்கான நூல்கள்.தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி,நேரு,நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப் பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.
  • 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.

எங்கும் சடலங்கள்,அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள்,காயமடைந்த ,கொல்லப்பட்ட உறவினர்களின்
அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் இரண வடுவாகஅச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர். வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?

முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச் செய்தி வந்தது.

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய
பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை. வல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள்,பாலியல் கொடுமைகள்
,சித்திரவதைகள், வீடழிப்பு ,சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர். உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும்.!


லண்டனில் இருந்து வெளிவரும் the sunday telegraph நாளிதழ் வெளியிட்ட ஆசிரிய தலையங்கம் இதுதான்.என்னால் இதுக்கு சுட்டி கொடுக்க முடியவில்லை

.editorial The sunday telegraph 13.08.89


over 50 tamil civilians, including women and children appear to have been murdered in raid on a village by indiantroops who were originally sent to sri lanka to restore peace.so india joins the melancholy list powers which,though democratic and based on the rule of law, have not always prevented a breakdown of moral restraint among their armed forces serving abroad.it is indias My Lai or perhaps it is hear amritsar

from Nehru onwards india's leaders have lectured the world about how to behave but,if anything this massacre is worse than My Lai . then American troopas simply ran amok in the Sri Lankan village, the Indians seem to have been more systematic;the victims being forced to lie down, and then shot in the back. yet India would long have
had us believe that such horrors are largely perpetrated by western powers with imperialist antecedents.


such horrors accur when troops are cooped up in a situation ahich looks likely to have no solution or end, and have themselves been the victim of terrorist atrocities. post colonial indians, then, are no different from the rest of humanity.the massacre does not mean that India's policical system is any less democratic and legally-based than did My Laiof America's . but we await the naming by New Delhi of the Indian version of Lieutenant gallery, the American officer in command at My Lai,and his punishment


My Lai என்பது என்ன ?

1968 ம் ஆண்டு மார்ச் மாதம் 16 ந் திகதி வியட்நாமில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகளின் ஒருபிரிவு வியட்நாமின் குவாங்கை மாகாணத்தில் இருக்கும் மைலாய் கிராமத்தினுள் லெப். வில்லியம் கெலிஎன்னும் அதிகாரியின் கீழ் புகுந்து அப்பாவி வியட்நாமிய மக்கள் பல நூறு பேரை கொன்று குவித்ததுடன் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். வீடுகள் கொழுத்தப்பட்டன.ஆடு மாடுகள் போல மக்களை ஓட்டி சென்று வயல்வெளிகளில் வைத்து சுட்டுக் கொன்றனர். 4 மணித்தியாலங்களாக நடந்த இந்த வெறியாட்டம் உயர் இராணுவஅதிகாரிகளால் அமெரிக்க மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டது.இராணுவ அறிக்கை ஒன்று மைலாயில்நன்கு திட்டமிட்ட ஒரு இராணுவ நடவடிக்கை மூலம் பலநூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கூறியது.இதைப் பற்றி அறிந்த ஒரு இராணுவவீரன் உயர் அதிகாரிகளுக்கும்,அரசியல் தலைவர்களுக்கு விசாரணை வேண்டி எழுதினான், ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.பின்னர் 1969 ஆண்டு டிசம்பர் மாதம் 03ம் திகதி"லைவ்" பத்திரிகை மேற்படி இராணுவவீரனால் எடுக்கப்பட்ட படங்களை பிரசுரித்த பின்னரே இச் சம்பவம்பற்றி அமெரிக்க மக்களுக்கும் வெளி உலகுக்கும் தெரிய வந்தது. இருந்தும் தமது வீரர்கள் இவ்வாறு
காட்டுமிராண்டித்தனமாக நடந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லி பல அமெரிக்கர்கள் இதனை நம்ப மறுத்தனர்.

மேலதிக விபரம் தேவைப்படுவோருக்காக.-

யாழ்ப்பாணத்தில் என் பணி - லெப். ஜெனரல் எஸ்.சி பாண்டே

MASSEACRE AT VALVETTITURAI INDIA'S MY LAI - GEORGE FERNANDEZ

வல்வை படுகொலைகள் தொடர்பாக யாழ்பாணத்தில் இருந்து
வெளிவரும் உதயன் பத்திரிகை 02-08-2004 ல் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதற்கு
சுட்டி கொடுக்க முடியவில்லை. ஈழநாதனுடைய வலைப்பதிவில் அக் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.அங்கு சென்று பார்க்கலாம்.

Tuesday, August 03, 2004

"அதுக்கு" தயாரித்தது "இதுக்கு" கைகொடுக்கிறது.

வயது வந்தோருக்கானது

ண்மையில் திரு வெங்கட்டின் வலைப்பதிவில் ஆணுறைகள் பற்றிய ஒரு பதிவினைப் பார்க்கமுடிந்தது. ஆணுறைகள் பற்றியும், ஆணுறைகளின் வகைகள் பற்றியும், உபயோகிக்கும் முறைகள் பற்றியும் அதை வாங்குபவர்கள் கூச்சம் இன்றி வாங்கும் வழிவகைகள் பற்றியும், ஆணுறைகளின் இதர பயன்பாடுகள் பற்றியும் மிகவும் எளிய தமிழில் அழகாக விளக்கியிருக்கிறார் திரு வெங்கட் அவர்கள். தன்னுடைய பதிவில்ஆணுறைகளின் 04 பிற உபயோகங்கள் பற்றியும் கூறியிருக்கின்றார்.

இது இப்படியே இருக்க இன்றைய தினமலர் நாளிதழில்
(03-08-2004) ஆணுறைகளின் பயன்பாடு பற்றிய ஒரு புதிய செய்தி வெளி வந்திருக்கிறது செய்தி இதுதான் இந்தியாவின் புனித நகரான வாரணாசியில் ஒரு நாளைக்கு 6 இலட்சம் ஆணுறைகள் விற்பனை ஆகின்றனவாம்.ஆணுறைகள் அதிகம் விற்பதால் அங்கு சிறப்பு குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகிறதோ என்று எண்ணுகிறீர்களோ? அதுதான் இல்லை. மேலே படியுங்கள்.

பனாரஸ் பட்டுப் புடவைகள் பற்றி உலகம் அறிந்ததே.அது போலவே வாரணாசி நகரும் பனாரஸ் பட்டுக்கு புகழ் பெற்றது. இங்கு ஏராளமான நெசவாளர்கள் மேற்படி சேலை தயாரிக்கின்றனர். நெசவுத் தறியில் இங்குங்கும் ஓடும் ஓடக்கட்டையில் ஆணுறைகளைத் தேய்க்கும் போது நல்ல மசகாக(lubricate) தொழிற்படுகிறது.இதனால் ஓடக்கட்டை மிக வேகமாக ஓட நெசவு விரைவாக ஆகின்றது. வாரணாசியில் இருக்கும் ஒன்றாரை லட்சம் முதல் 2 லட்சம் வரையான நெசவாளர்கள் தினசரி 3 முதல் 4 ஆணுறைகளை பயன்படுத்துகின்றனராம்.

இது போன்ற முறைகளைப் பயன் படுத்தி சேலை தயாரிக்கின்றனர் என்பது வெளியில் தெரிந்தால் சேலை வாங்குவோர் சேலையைப் புறக்கணிக்கக்கூடும் என்பதால் பல நெசவாளர்கள் உண்மையை மறைத்து விடுகின்றனராம். இதைப் போல நல்ல ஒரு பொருள் இந்த உபயோகத்துக்கு கிடைக்கும் என்றால் தாங்கள்ஆணுறை பாவிப்பதை நிறுத்தி விடுவதாக அங்குள்ள நெசவாளர்கள் சொல்கின்றார்களாம். "அதுக்கு" உருவாக்கியது எதுக்கெல்லாம் பயன்படுகிறது பார்த்தீங்களோ?

எனக்கென்னவோ வாரணாசி நெசவாளர்கள் வாசனையூட்டப்பட்ட ஆணுறைகளை முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வாசத்துக்கு வாசமும் ஆச்சு ஓடக்கட்டைக்கு மசகும் ஆச்சு. அப்பிள்,ஒறேஞ் போன்றவிதவிதமான வாசனைகள், நெய்யும் புடவைகளிலும்,நெசவுத்தறிகளிலும், நெசவாளர்களின் மூக்குகளிலும், மணக்கும்.ஊதுபத்தி,சாம்பிராணி செலவும் மிச்சம். இனி சேலை வாங்குபவர்கள் யாராவது ஆணுறை பாவித்து நெய்த சேலையோ என்று கேட்டால் கூட ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்த வாசனையூட்டப்பட்ட ஆணுறை பாவித்தது என்று சொல்லிக் கொள்ளலாம். யாருங்கோ நறு நறு என்று பல்லை நறுமிறது?

Sunday, August 01, 2004

ஏமாறுகிறவர்கள் இருக்கும் மட்டும் - 2

இதே தலைப்பில் தமிழ்நாட்டில் இருந்து ரொரன்ரோ வருகை தந்து ஒரே மருந்தினையே எல்லா வியாதிகளுக்கும் கொடுத்து காசு பார்த்த ஒரு ஆயுள்வேத வைத்தியரைப் பற்றி எழுதியிருந்தேன்

சில வாரங்களுக்கு முன்னர். தமிழ் பத்திரிகைகளில் பார்த்தேன். கும்பகோணத்தில் இருந்து ஒரு சோதிடர் வந்திருக்கிறார் என்று பூனூல் சகிதம் போட்டோ
விளம்பரம். இப்போது தமிழ்நாட்டில் இருந்து நாடி சோதிடர்,எண் சோதிடர்,சாமியார்கள் இப்படி பலருக்கு
ரொரன்ரோ தான் சொர்க்கமாக மாறிவிட்டது. விஞ்ஞான தொழில்நுட்பத்தில் முன்னேறிய கனடா போன்ற
நாட்டிற்கு வந்த பின்னரும் இப்படிப் பட்டவர்களிடம் ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது.

இப்போது ரொரன்ரோ வில் உள்ள மக்களுக்கு தெய்வீக தரிசனம் அளிக்க கேரளத்தில் இருந்து வந்திருப்பவர்
மாதா அமிர்தானந்தமாயி அம்மா. தனது நாட்டில்,மாநிலத்தில் எவ்வளவோ மக்கள் துன்பத்தில்,வறுமையில் உழன்று கொண்டுஇருக்கின்றனரே அவர்களை எல்லாம் விட பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு தரிசனம் தர வந்திருக்கும் அம்மாவின் கருணைதான் என்ன?

இங்குள்ள 5 நட்சத்திர ஹொட்டலில் தங்கியிருக்கும் அம்மா தனது பக்தர்களை ஆரத்தழுவி ஆசீர்வதிக்கிறார்.
இதற்கு கட்டணம் தலைக்கு 50 கனேடியன் டொலர்கள்.இப்படி பணம் கட்டி ஆசிர்வாதம் பெறத்துடித்த 5800 பக்தர்களை இரவு 10.00 மணி தொடங்கி காலை 6.45 வரை கட்டிப்பிடித்து ஆசீர்வாதம் செய்த அம்மா
திரட்டிய பணம் எவ்வளவு என்று பார்த்தீர்களா? அமிர்தானந்தமாயி அம்மாவின் வருகையை ஒட்டி இங்கு
வெளிவரும் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்கள்,தொலைக்காட்சி விளம்பரங்கள் என்று தடல்புடல்தான்போங்கள். எல்லாம் டொலரின் மகிமைதான்.

அண்மையில் தான் சாயிபாபாவின் லீலைகள் பற்றி பி.பி.சி.யில் வெளிவந்து உலகமே சிரித்தது. அன்னை தெரேசாவை இன்றும் உலகம் மதிக்கிறது என்றால் அவர் தன்னைக் கடவுள் என்று சொல்லவில்லை
பணம் சேர்த்தார்,அனாதைகளுக்கு,நோயால் பாதிக்கப்படடவர்களுக்கு உதவிகள் செய்தார்.

சத்தியசாபி பாபா உதவிகள் செய்யவில்லையா என்று கேட்பீர்கள்.பாபாவைப் சுற்றி ஒரு மர்ம திரை இருப்பதை காலத்துக்கு காலம் நிகழும் சம்பவங்களும்,வரும் செய்திகளும் சொல்கின்றனவே.
அது என்னவோ தெரியவில்லை இப்படி சாமியார்களைச் சுற்றி இருக்கும் பக்தர்கள் யார் ஏன்று பார்த்தால் மெத்தப் படித்தவர்களாகவே இருக்கின்றனர். ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் கல்கி சாமியாரிடம் படித்தவர்கள்
பலர் சீடரானதும் ,ஏற்பட்ட சர்ச்சைகளும் ஞாபகத்திற்கு வருகிறது.

எனது வீட்டிற்கு பக்கத்தில் ஒரு வெற்று நிலம் நீண்டகாலமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் பார்த்தபோது புள்டோசர்கள் அந்த நிலத்தினை துப்பரவாக்கிக் கொண்டு இருந்ததைக் காணமுடிந்தது.நேற்றுப்
பார்த்தேன். ஒரு விளம்பரப் பலகை ஒன்று காணப்பட்டது.இது சத்தியசாயி பாபா நிலையத்துக்காக ஒதுக்கப்பட நிலம் என்ற வாசகங்கள் ஆங்கிலத்தில் பளிச்சிட்டது.






Tuesday, July 27, 2004

அம்மாவும் நீயே! மம்மியும் நீயே!

 


 
.தி.மு.க வின் தலைமையகத்தில் போக்குவரத்து ஊழியருக்கு பரிசு வழங்கும் போது எடுத்த படம் இது .பரிசு வாங்கும் போக்குவரத்து ஊழியரைப் பாருங்கள். அவரில் தெரிவது  என்ன பயமா?   மரியாதையா?  பக்தியா?

சிங்கத்தின் முன்னால் நிற்கும் மானைப் போலத்தான் எனக்கு அந்த ஊழியர் தெரிகிறார்.அவரில் மரியாதையை விட பயத்தினைதான் அவதானிக்க முடிகிறது. அது என்னவோ தெரியவில்லை ஜெயலலிதாவுக்கு முன்னால்  நிற்கும் போது பெரும்பாலானோர் இப்படிதான் காணப்படுகின்றனர். "அம்மா" வின் தோற்றம் எதிரில் நிற்கும் போது mummy யின் தோற்றம் மாதிரி இவர்களின் கண்ணுக்கு தெரிகிறதோ தெரியவில்லை.

 எதுக்கும் ஜான் பொஸ்கோவின் வலைப்பதிவில் இருக்கும் "அம்மாவின்" தோற்றத்தினைப்   பாருங்கள். அம்மா வேறுமாதிரி தெரிந்தால்   நான் பொறுப்பில்லை.

Friday, July 23, 2004

பி.சந்திரசேகரனின் பேட்டி

ஜூனியர் விகடன் 25.07.2004  இதழில் "இந்தியாவே கை கொடு" என்னும் தலைப்பில் ஒரு பேட்டி வந்துள்ளது.  பேட்டியை இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களின் தலைவர்களில் ஒருவராகிய ,இலங்கை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய திரு பி.சந்திரசேகரன் வழங்கி இருக்கிறார்.
தலைவர் பிரபாகரனை பல முறை சந்தித்து பேசியிருக்கும் சந்திரசேகரன் பல உண்மைகளை  உணர்ந்தவர் , பல உண்மைகளை இதில் தெரிவித்தும் இருக்கிறார். பாண்டவர்களின் நிலை போல் இன்று நிற்கும் விடுதலைப் புலிகளின் நிலை பற்றி மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.திரு பி.சந்திரசேகரன் முன்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சில வருடம் சிறையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 20, 2004

இந்தியாவின் NO-1 தமிழ் நாளிதழ் எது?

ந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் தமிழ் வார இதழ் குமுதம் என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததே.பத்திரிகைகளில் இந்தியாவில்
 NO -01  தமிழ் நாளிதழ் என தினத்தந்தியும்,இல்லை காசு கொடுத்து வாங்கிப்படிப்போர் எண்ணிக்கையில் தினமலர் தான் முதலிடத்தில் என்று தினமலரும் விளம்பரம் செய்வதையும் நான் அவதானித்திருக்கிறேன்.

அப்படியாயின் தினத்தந்தியை எல்லோரும் ஓசியில் படிக்கிறார்கள் என்று தினமலர் சொல்கின்றதா? உண்மையில் இந்தியாவில் தமிழ் பத்திரிகைகளில் அதிகம் விற்பனையாவது தினத்தந்தியா?   தினமலரா?   நான் இந்தியாவில் வசித்த காலத்தில் இருந்து எனது   மனதில் இருந்து வரும் சந்தேகம் இது.

வாழ்க்கை என்பது இதுதானோ?

னக்கு நினைவு தெரிந்தநாளில் இருந்து காலையில் கோப்பி(காப்பி)குடிப்பது எப்படி தவறாதோ அதே போல பத்திரிகை படிப்பதும் தவறியதில்லை  சரியாக 7.00  மணிக்கு  பத்திரிகை பையன்(பையர்)  வந்து  பெல் அடிப்பார். பத்திரிகையையும் கையோடு கொண்டு ஓடுவது சாப்பாட்டு மேசைக்கு, சாப்பிட்டுக்கொண்டே 8.00  மணி பாடசாலைக்கு போகுமுன்னர் பத்திரிகை முழுவதும் படித்துவிடுவேன்.  இப்படிஆரம்பித்த பழக்கம் பின்னர் சாப்பிடும் நேரத்தில் எதாவது ஒரு புத்தகம் அல்லது பத்திரிகை இருந்தால் தான் சாப்பாடு உள்ளே போகும் என்ற அளவில் வந்து விட்டது.


 புத்தகம் வாசிக்காமல் சாப்பிட்டால் சாப்பிட்டது போலவே இருப்பதில்லை. இப்படி எல்லாவற்றையும் படித்ததால் நிறைய பொதுவிடயங்கள் அரசியல் விடயங்கள் எனது மண்டையினுள் புகுந்துகொள்ள பாடசாலையில் நடைபெற்ற ஒரு பொதுஅறிவு போட்டி நிகழ்சியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றேன். அதிலிருந்து நண்பர்,உறவினர் வீடுகளுக்கு சென்றால் ஒருவர் சொல்லுவார் இந்த பொடியன் சரியான கெட்டிக்காறன்.பொது விடயத்தில் என்ன கேட்டாலும் பதில் சொல்லுவான் என்று. உடனே மற்றவர்கள் 4, 5 கேள்விகள் கேட்பார்கள். இப்படி எங்கள் உறவினர், நண்பர்கள், மற்றும் பாடசாலை வட்டாரங்களில் நான் பொது அறிவில் பிரபலம்ஆனேன்.

இனி நான் வாசிப்பது  கூட மிக வேகத்தில் தான்.எனது அப்பப்பாவுக்கு (எனது அப்பாவின் தந்தை)  சந்தேகம் இப்படி மிக வேகத்தில் வாசிப்பது மனதில் நிற்குமா என்று'ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு இராமாயணத்தை எடுத்து கையில் தந்து சொன்னார் குறிப்பிட்ட பக்கத்தினை எடுத்து இதிலிருந்து 5 பக்கத்தினைப் படிகேள்விகள் கேட்பேன் என்று.  5 பக்கங்களையும் படித்தவுடன் கேள்விகள் கேட்டார். நான் கேள்விகளுக்கு பதில் சொன்னதுடன் மட்டும் அல்ல எந்த பக்கத்தில் எந்தெந்த  விடயம் இருக்கு என்பதனையும்சொன்னதுடன் அசந்துவிட்டார். எனக்கு ஒரு சிறு பரிசு கூட தந்த ஞாபகம். 

சில தினங்களுக்கு முன்னர் எனது பகுதி MP  யிடம் ஒரு அலுவலாக சென்றிருந்தேன். MP யின் காரியதரிசி பெண் எல்லா விபரங்களையும் பதிந்துவிட்டு  எனது மனைவியின் Date Of Birth கேட்டார். எனக்கு உடனடியாக ஞாபகம் வரவில்லை. சில நிமிடங்கள் யோசித்தேன்.நான் யோசித்துக்கொண்டு நிற்பதை கண்ட அருகில் அமர்ந்திருந்த மனைவி வந்து விபரம் சொல்லகாரியதரிசி பதிந்தார்.

பின் சிரித்துக்கொண்டு சொன்னார் எல்லா கணவர் மாரும் இப்படிதான் போலும்என்று. பின்னர் எது நடக்கும் என நினைத்தீர்களோ அதுவே சரியாக நடந்தது.வீடு வந்து சேருமட்டும்  எனக்கு திட்டுத்தான். வீட்டிலும் தொடர்ந்து  திட்டுதான்.திருமணம் முடித்தவர்களுக்குதெரியும் தானே பின் என்ன நடந்திருக்கும் என்று.

பிழை என்னில் தானே. ஞாபக மறதி ஏற்படும் அளவிற்கு எனக்கு வயதில்லை.ஏன் இப்படி?  இரவு படுத்திருக்கும்போது எனது நினைவுகள் சற்று பின்னோக்கி போனது.அது தான் மேலே உள்ளது.  நான் மட்டும் தான் இப்படியா? அல்லது காரியதரசி பெண் சொன்னது போல பெரும்பாலான கணவன்மார்  இப்படிதானா?   உங்கள் அனுபவங்கள் எப்படி?


சந்திரிகாவின் கட்சி அங்கீகாரம் ரத்தா?

லங்கையில் தற்போது 51 அரசியல் கட்சிகள் தேர்தல்திணைக்களத்தில் அரசியல் கட்சியாப் பதிவுசெய்துள்ளன.இதில் 25 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தினை ரத்துசெய்வது குறித்து தேர்தல் திணைக்களம் தீவிரமாக ஆராய்ந்து  வருவதாக தெரியவருகிறது.கடந்த இரண்டுக்கும்மேற்பட்ட தேர்தல்களில் பங்கேற்காத 25 கட்சிகளின் அங்கீகாரமேஇரத்து செய்யப்பட உள்ளது.
 
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்இலங்கையின் ஒரு பிரதான கட்சியும்,இப்பொது ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் பிரதான கட்சியுமாகிய சிறீலங்கா சுதந்திரக்கட்சியின்அங்கீகாரமும் கேள்விக்குறியாகி இருப்பதுதான்.பொது ஜன ஐக்கிய முன்ணணிஎன்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டமைத்து பல தேர்தல்களில் பங்குபற்றியதால் சிறீலங்கா சுதந்திரகட்சி என்ற பெயரில் போட்டியிட்டு பலகாலமாயிற்று.
 
அதே போல ஒரு நிலைதான் லங்கா சமசமாஜக் கட்சிக்கும்.அத்துடன் விடுதலைப்புலிகளின்  அரசியல் கட்சியாகிய விடுதலை புலிகள் மக்கள் முன்னணி, பேரியல் அஷ்ரபின் தேசிய ஐக்கியமுன்னணி  போன்றவற்றின் அங்கீகாரமும் இரத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
90 களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது விடுதலை புலிகளால்  விடுதலைப் புலிகள் மக்கள்முன்னணி  என்ற கட்சி உருவாக்கப்பட்டு தேர்தல் திணைக்களத்தில்அரசியல் கட்சியாக பதியப்பட்டதும்.இதன் தலைவராக மாத்தையாஇருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Friday, July 16, 2004

தமிழ்நாட்டில் ஒர் அவலம்.

இன்று மதியம் விகடன்,தினமலர் இணயத் தளத்தில் வந்திருக்கும் செய்தி மனதினை என்னவோ செய்கிறது.கும்பகோணத்தில் ஒரு பாடசாலையில் தீப்பிடித்ததில் 85 இளம் துளிர்கள் (5,6 வயது பாலகர்கள்) தீயிலே கருகி மடிந்திருக்கின்றனர்.100 பேர் அளவில் தீக்காயமடைந்திருக்கின்றனர்.  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மாலை வீடு வருவார் என்று எதிர்பார்த்திருந்த பெற்றோர் மனதில் இடி விழுந்திருக்கிறது.எப்படி இது நடந்தது என்பது இன்னமும் தெரியவரவில்லை. ஆனால் கண்டிப்பாக விதிமுறைகளுக்கு மாறாகவே இப் பள்ளி நடத்தப்பட்டிருக்கவேண்டும். குறிப்பிட்ட தொகை மாணவர்கள் இருக்கும் கட்டடத்தில் குறிப்பிட்ட வெளியேறும் வாசல்கள் ,தீ ஏற்பட்டால் வெளியேறும் அவசரகால வழிகள், போன்றன அமைக்கப்பட்டிருந்ததா என்பது கேள்விக்குறியே? கண்டிப்பாக இப் பள்ளிக்கு விதி முறைகளுக்கு மாறாகவே அனுமதி வழங்கப்பட்டிருப்பது நாலு கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் இருந்தே தெரிகிறது. தமிழ் நாட்டில் பள்ளிகள் கல்லூரிகள் நடத்துவது வியாபாரம் அல்லது ஒரு ஒரு தொழில் என்றாகிப்போன நிலையில் சேவையை விட இலாபம் குறியாகிவிட்டநிலையில் இப்படி நிகழ்வுகள் நேர்வது தவிர்க்கவியலாது. எல்லா கல்லூரிகள்,பள்ளிகளில் கண்டிப்பாக இருக்கவேண்டிய விதிமுறைகள், மாணவருக்கான வசதிகள் "பத்திரங்களில்" மட்டுமே இருக்கும். அதிகாரிகளின் வாயினை பணம் அடைக்கும். சில காலங்களிற்கு முன்னர் தான் இதே போல ஒரு சம்பவம் திருச்சி,சிறீரங்கத்தில் நடந்து மணமகன் உட்பட பலர் இறந்தது நடந்தது. இப்போது இச் சம்பவம். இனி போட்டி போட்டுக்கொண்டு அரசியல்வாதிகள் பார்வை இடுவார்கள். பண உதவி செய்வார்கள்.அவர்களுக்கு வோட்டு குறிக்கோள். பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் அவர்களுக்கு பத்திரிகை விற்பனை குறிக்கோள். இனி கீழ் நிலை அதிகாரிகள் பந்தாடப்படுவார்கள் மேல் நிலை அதிகாரிகளால், குறிக்கோள் குற்றத்தினை யார் தலையிலாவதுபோடவேண்டும் . பண உதவி ஒன்றும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் உயிரினை மீட்டுகொண்டுவரப்போவதில்லை.காயமடைந்த மழலைகளிற்கு சிறந்த சிகிச்சை வசதிகள் அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படுவதை அரசு உறுதிப்படுத்தவேண்டும்.இப்படி ஒரு சம்பவம் இன்னொரு இடத்தில் நடைபெறாமல் பார்ப்பதே அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் கடமையாக இருக்கவேண்டும்.அனால் அவர்களுக்கு அது முக்கியமானதாக இருக்காது ஏனெனில் அவர்களின் பிள்ளைகள் படிப்பது இப்படிப்பட்ட பள்ளிகளில் அல்லவே. மொத்ததில் இச் சம்பவம் தமிழ்நாட்டில் இன்னும் இரண்டொரு மாதங்களுக்கு பரபரப்பாக இருக்கும் பின்னர் எல்லோரும் மறந்து விடுவார்கள்.இன்னொரு இப்படியான சம்பவம் நடைபெறும் வரை. உலக அரங்கிலே தமிழகத்திற்கு ஒரு கரும்புள்ளியாக இச் சம்பவம் இருக்கும் என்று கூறலாம். குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Wednesday, July 14, 2004

கனேடிய தேசிய நீரோட்டத்தில் இணையும் தமிழரின் வானொலி

நேற்றுமுன் தினம் மதியம் காரில் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தேன்.காரில் தமிழ் வானொலி
நிகழ்சிகள் ஒலித்துக்கொண்டிருந்தது.நான் பொதுவாக கனேடிய தமிழ் வானொலியைத்தான் கேட்பது வழமை
காரில் கனேடியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.கீதவாணி ,கனேடிய தமிழ் வானொலி என்று மூன்று 24
மணி வானொலிகளை
கேட்கக்கூடியதாக வசதி செய்திருக்கிறேன் 100 டொலர் செலவில்.கேட்டுக்கொண்டிருந்த போதுதான் ஞாபகம் வந்தது
கனேடிய பல்கலாச்சார வானொலி(CMR) தனது
ஒலிபரப்பினை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கிறது என்பது.
சரி பரிசோதனை ஒலிபரப்பு எதாவது செய்யலாம் என்ற எதிர்பார்புடன் 101.3 FM க்கு சென்றேன்.என் காதுகளை
யே நம்பமுடியவில்லை " தீண்டாய் மெய்தீண்டாய்" பாடல் ஸ்ரீறியோ ஒலிநயத்துடன் கார் முழுவதையும் நிறைத்தது.
இடையிடையே ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் பரீட்சார்த்த ஒலிபரப்பு என்ற அறிவித்தல்.
ரொராண்டோ வான்வெளி எங்கும் தமிழ் முழக்கம்.எனது சந்தோசத்திற்கு அளவில்லை. கண்டிப்பாக நீங்கள்
கேட்பீர்கள் ஏற்கனவே 3 வானொலிகள் இருக்கும் போது இன்னொரு வானொலி தொடங்கியதுக்கு
கரிகாலன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுகிறானே ஒரு வேளை கனடாவில் இப்போது சம்மர் என்பதால்
வெப்பம் கூடி கரிகாலனுக்கு எதாவது ஆகிவிட்டதோ என்று. சந்தோஷத்திற்கு காரணம் அறிய தொடர்ந்து படியுங்கள்

நான் முன்பு சொன்னது கூட ஒரு வகையில் பிழைதான். ரொரண்டோவில் இப்போது ஜந்து 24மணித்தியாலம்
ஒலிக்கும் வானொலிகள் இயங்கி வருகின்றன.அதைவிட இப்போது கனேடிய பல்கலாச்சார வானொலி ஆக
மொத்தம் 06 வானொலிகள்.சரி அந்த 05 வானொலிகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்

கனேடியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (CTBC)
கீதவாணி
கனேடிய தமிழ் வானொலி(CTR)
சர்வதேச தமிழ் வானொலி-கனடா(ITR)
தமிழோசை வானொலி

சர்வதேச தமிழ் வானொலி-கனடா(ITR),தமிழோசை வானொலி இவை இரண்டும் அண்மையிலேயே
தமது ஒலிபரப்பினை ரொரண்டோவில் ஆரம்பித்திருக்கின்றன.இந்த ஐந்து வானொலிகளையும் சாதாரண வானொலி பெட்டிகளில்
களில் கேட்கமுடியாது.என்ன வானொலி என்கிறான், சாதாரண வானொலிப் பெட்டிகளில் கேட்கமுடியாது என்கிறான்
நாம் முன்னரே ஊகித்தது சரிதான் என்கிறிர்களா? கொஞ்சம் பொறுங்கள்.மேற்படி வானொலி ஒலிபரப்புக்கள்
சிறப்பு பண்பலையில்(SCMO) ஒலிபரப்பப்படுவதால் விசேடமாக தயாரிக்கப்பட்ட வானொலி பெட்டிகளில்
மட்டுமே கேட்கமுடியும்.சாதாரணமாக வீட்டில் உள்ள வானொலிகளிலோ அல்லது காரில் உள்ள வானொலிகளிலோ கேட்கமுடியாது.
அப்படி கேட்க வேண்டுமானால் சில விசேட உபகரணங்களை அவற்றில் பொருத்தவேண்டும்.ஆனால் 101.3 FM இல் ஒலிபரப்பாகும் கனேடிய பல்கலாச்சார வானொலி(CMR) சாதாரணமாக
நாம் உபயோகிக்கும் எந்த வானொலிகளிலும் கேட்க முடியும். இப்போது புரிகிறதா எனது மகிழ்ச்சிக்கு
காரணம்.

மறு பதிவில் தொடர்வேன்


Tuesday, July 13, 2004

ஏமாறுகிறவர்கள் இருக்கும் மட்டும்........

சக்கரை வியாதியினால் துன்பப்படுகிறீர்களா?
ஆஸ்மா,இரத்தக்கொதிப்பினால் அவதிப்படுகிறிர்களா?
கை,கால் ,இடுப்பு வலிகளால் அவதியா?இல்லற வாழ்வில் திருப்தி இல்லையா?
குறிப்பிட்ட மருந்தை பாவியுங்கள் அல்லது வைத்தியரைச் சந்தியுங்கள்!
கடந்தவாரம் ரொரண்டோவில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளில் எல்லாம்மேற்படிவாசகங்கள்
இடம்பெற்றமுழுப்பக்க விளம்பரங்கள்,வானொலிகளில் எல்லாம் இதே விளம்பரங்கள்,
தீராத கொடிய புற்று நோயைக் கூடதனது மருந்து தீர்த்து வைக்கும் என்றும், இன்ன திகதி இன்னஇடத்தில்
சந்திக்கலாம் என்றும் வானொலிப் பேட்டிகள்.தமிழ் நாட்டில் இருந்து கனடாவுக்கு மூன்றாவது தடவையாக
வருகை தந்திருக்கும் ஒரு மூலிகை வைத்தியரின்பேட்டிதான் அது.எனக்கு இந்தியாவில் இருக்கும்
"சுற்றுப்பயணப் புகழ்" மூலிகை வைத்தியர்களின் ஞாபகம் தான் வந்தது.
சரி என்னதான் நடந்தது என்கிறீர்களா?
அந்த வைத்தியரிடம் நிறைய கூட்டம் போனது என்று கேள்வி.நல்ல பிரயோசனமான சுற்றுப்பயணம்.
வைத்தியருக்கு தான், டொலரில் அல்லவா பணம் கொண்டு சென்றிருக்கிறார்.அது தீர, இருக்கவே இருக்கிறது
4வது சுற்றுப் பயணம் .ஏமாறுகிறவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள்கவலைப்பட வேண்டியதில்லை.

எத்தனை பெரிய மனம் உனக்கு ?

எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு!
எல்லோரும் மனிதரே என்பது
உன் கணக்கு

ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்!
உன்னை எட்டி உதைத்தாலும் அவன்
மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்!
உன் கதையை முடித்தாலும் அவன்
மனிதன்!

அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்!
உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன்!
உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!


தாக்க வந்தாலும் அவன் மனிதன்!
உன்
தமிழைக் கெடுத்தாலும் அவன் மனிதன்!

ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன்!
தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்!

****கவிஞர் காசி ஆனந்தன்*****

Sunday, July 04, 2004

கஞ்சாகட்சி

கனடாவில் கடந்தவாரம் நடைபெற்ற மத்திய அரசை
தெரிவுசெய்வதற்கான தேர்தலில் லிபரல் கட்சி 135 ஆசனங்களைப்பெற்று வெற்றி
பெற்றது உங்களுக்கு தெரிந்ததே.இத் தேர்தலில் பல சிறிய கட்சிகள் போட்டியிட்டதை
பலர் அறியார்.ஒரு சிறிய கட்சி நாடளாவியரீதியில் போட்டியிட்டு 33,590 வாக்குகள் பெற்றுள்ளது
தேர்தல் என்றால் பெரிய கட்சிகள் முதல் லெட்டர்பாட் கட்சிகள் வரை போட்டியிடுவதும் வாக்குகள்
பெறுவதும் இயற்கை தானே என்கிறீர்களா?அதுவும் சரிதான் .ஆனால் இந்த கட்சியின் பெயரும்,அதன்
கொள்கையும் தான் வில்லங்கமானவை.

கட்சியின் பெயர் கஞ்சா கட்சி(marijuana party) கொள்கை என்னவென்றால் கஞ்சாச் செடிகளை வளர்க்கவும் கஞ்சா புகைக்கவும் விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை அகற்றவேண்டும் என்பதே
மது அருந்தி வெறிகோள்ளும் உரிமை,மற்றும் புகைபிடித்து புற்றுநோயாளியாகும் உரிமை கனேடியர்களுக்கு இருக்கும் போது கஞ்சா புகைத்து பேரானந்தத்தில் திளைக்கும் உரிமை மறுக்கப்பட்டது ஏன் என்பதுவே இவர்களின் கோரிக்கை
இக்கட்சி கனேடிய அரசினால் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் என்பதுடன்
அமெரிக்காவிலும் இக்கட்சி இயங்கிவருகிறது.

Friday, July 02, 2004

வெளிவந்த உண்மைகள்

உலக சுகாதார அமைப்பு அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பை நடாத்தி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2001லிருந்து 2003 ஆண்டு இறுதிவரை மேற்கொண்ட இந்த ஆய்வில் மனநோயாளிகளை அதிகம் கொண்டநாடுகள் மற்றும் மனநோயாளிகள் எவ்வாறு தோன்றுகின்றனர் போன்ற
விபரங்களை திரட்டுவதற்காக 14 நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் அதிக மனநொயாளிகளைக் கொண்ட நாடு எது என்று கண்டுள்ளார்கள் தெரியுமா? நீங்கள் நினைக்கலாம் எதாவது ஒரு ஆசிய அல்லது ஆபிரிக்க நாடாக இருக்கும் என்று அதுதான் இல்லை.
எல்லாவிதத்தாலும் வளர்ச்சியடைந்த அமெரிக்காதான் அந்தநாடு. அமெரிக்காவில் மட்டும் 26.4 வீதமானவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதற்கு அடுத்தபடியாக உக்ரேன் நாடு இரண்டாவது இடத்தினை வகிக்கிறது.மூன்றாவது இடம் பிரான்ஸ்க்கு கிடைத்துள்ளது.

14நாடுகளில் உள்ள மனநோயாளிகளின் விபரம்

1.அமெரிக்கா -26.4
2.உக்ரெயின் -20.5
3.பிரான்ஸ் -18.4
4.கொலம்பியா -17.8
5.லெபனான் -16.9
6.நெதர்லாந்து -14.9
7.மெக்சிக்கோ -12.2
8.பெல்ஜியம் -12.0
9.ஸ்பெயின் -9.2
10.சீனா -9.1
11.ஜேர்மனி -9.1
12.ஜப்பான் -8.8
13.இத்தாலி -8.2
14.நைஜீரியா -4.7


இந்த அறிக்கையினை பார்த்தால் பொருளாதார வளங்களில் வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிகளவான
மனநோயாளர் இருப்பதைக்காண முடிகிறது.இதற்கு காரணங்களாக பெரும்பாலும் தனிமை,போதை,வேலைவாய்ப்பின்மை,
தனிநபர்வன்முறைகள்.
குடும்ப உறவுகள் சீரின்மை,இயந்திரமயமான வாழ்க்கைமுறைகள்
என்பவற்றைக் கூறலாம். மேலைத்தேசத்தினரின் வாழ்க்கைமுறை பற்றி எங்கோ கேட்டது
"உனது பிள்ளையும்,எனது பிள்ளையும் சேர்ந்து எங்களுடைய பிள்ளைக்கு அடிக்கிறார்கள்"
இந்த ஒரே வரியில் அவர்களின் வாழ்க்கை முறைகள் புரிகிறது தானே.
எவ்வள்வுதான் வசதிகள்,பணம்
என்பன இருந்தாலும் மனதில் நிம்மதி வேண்டும்.கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகளுக்கிடையான உறவுகள் சீராக, பாசப்பிணைப்புடன் இருக்கவேண்டும்.எல்லாவற்றிலும் மேலைநாட்டவர்களை பின்பற்றும் எம்மவர்களுக்கு இவை சமர்ப்பணம்.


ஒரு முயற்சி

சில தினங்களுக்கு முன்னர் கூகிளில் ஒரு விடயம் சம்பந்தமாக தேடிக்கொண்டுஇருந்தேன்.பின்னர் கரிகாலன் என்றபெயரினை உள்ளிட்டு தேடிப்பார்த்தேன். முதலாவதாக எனது வலைபதிவையும்
பின்னர் வேறு பல தளங்களையும் பட்டியல் இட்டு காட்டியது.இரண்டாவது பக்கத்தில்
புகழ்பெற்ற தமிழர்கள் எனும் தலைப்பில் ஒரு தளத்தினையும் காணமுடிந்தது.தளத்தினுள் புகழ்பெற்றதமிழர்கள்
எனும் தலைப்பின் கீழ் பாரதியார்,கவிஞர் கண்ணதாசன்,பெரியார்,எம்.ஜி.ஆர்,வே.பிரபாகரன் போன்ற பலருடைய வாழ்க்கைவரலாறுகள் தொகுக்கப்பட்டிருப்பதையும் பார்க்கமுடிந்தது.சிலருடைய விபரங்கள் மேலோட்டமாக உள்ளது. தளத்தில் பல விடயங்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை. ஐக்கிய இராச்சியத்தில் இருந்து சிவசோதி சதீஷன் என்னும் ஒரு மாணவனால் இந்த தளம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக விபரம் உள்ளது.
புகழ் பெற்றதமிழர்கள் தொடர்பாக விபரங்கள் தருமாறு வேண்டுகோளும் காணப்படுகிறது.ஒரு மாணவனால் இப்படி ஒரு தளம் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.பல குறைகள் காணப்படினும் கூட.

Tuesday, June 29, 2004

அமைதி




உலக அமைதி

மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.

கவிஞர் காசி ஆனந்தனின் நறுக்குகள் நூலிலிருந்து..........

Thursday, June 17, 2004

யுத்தம் இல்லாத பூமி வேண்டும்.



மேலே உள்ள படத்தினைப் பாருங்கள். இதற்கு விளக்கம் தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.
யுத்தம் எப்படி ஈழத்தவரின் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.

Wednesday, June 16, 2004

100 எம்.பி வேணுமா?

நேற்றைய தினம் எனது யாகூ மெயிலைத் திறந்தபோது யாகூ புது வடிவம் காட்டிற்று
100 எம்.பி இடவசதி ,10 எம்.பி மெயில் அனுப்பும் பெறும் வசதி. அத்துடன் மேம்பட்ட
ஸ்பாம் எதிர்ப்பு வசதி இப்படி பல வசதிகளுடன் உள்ளடக்கத்திலும் சிறிது மாற்றங்களையும்
செய்திருக்கிறது.அத்துடன் மேம்பட்ட படங்கள் தேடும் வசதி¨யும் யாகூ செய்திருக்கிறது.
கூகிள், யாகூ என்பனவற்றிற்கிடையான போட்டியால் இது சாத்தியமாகி இருக்கிறது. உறங்கிக் கிடந்தவர்களை
எல்லாம்
கூகிள் தனது அறிவிப்பால் எழுப்பி விட்டுள்ளது. கூகிள் எல்லாத்துறைகளிலும் அகலக்கால் பரப்பத்தொடங்கி வருகிறதை
ப் பார்த்தால் இனி வரும் காலங்களில் கடும் போட்டிகள், மோதல்கள் இருக்கும் என நம்பலாம்.
அடுத்து "பந்து" இப்போது ஹொட்மெயில் பக்கம் போயிருக்கிறது.அவர்கள் இனி வரும்
நாட்களில் என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.ஆனால் அவர்கள் எதாவது செய்து தான்
ஆகவேண்டும் என்று நினைக்கிறேன், இதற்குத்தான் தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது
"கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் என்று" எதிர்க்கடையானால் என்ன எதிரிக்கடை
யானால் என்ன "யார் குற்றினாலும் அரிசி வந்தால் சரிதான்" என்கிறீர்களா?
அது.. அது.. தாங்க எனது கொள்கையும். மொத்தில் கொண்டாட்டம் எங்களுக்கு.
திண்டாடம் யாருக்கு? அவங்களுக்கு தாங்க.

Tuesday, June 15, 2004

பதில் சொல்லலாமே!

எனது வலைப்பதிவு ஆரம்பித்த நாட்களில் எனக்கு சில படங்களை வலைஏற்றம் செய்யவேண்டும் என்று ஆசை.சரி
ப்ளாகரில் வழி சொல்லி இருக்காங்கதானே என்று ஹெல்ப்பை பார்த்துவிட்டு "ஹலோ" பதிவிறக்கம் செய்து
படத்தையும் எனது கருத்துக்களையும் எழுதிவிட்டு போஸ்ட் பணிவிட்டு எனது வலைப்பதிவில் போய் பார்த்தால்
படம் ஒழுங்காயும்,எழுத்துக்கள் எல்லாம் ????? யாகவும் தெரிந்தது. சரி என்ன பண்ணலாம் என்று யோசித்துவிட்டு
அந்த பதிவை அழித்துவிட்டு மீண்டும் ஒரு முறை போஸ்ட்
செய்து பார்த்தேன்.மீண்டும் அதே படம் ,எழுத்துக்கள் எல்லாம்??????. மீண்டும் ஙே..... .அத்தோடு படம் வலையேற்றும்
ஆசையை விட்டுவிட்டேன்.
பின்னர் இரண்டொரு நாளுக்கு முன்னர் கூகிள் போய் தேடிப்பார்த்தபோது சில வலைத்தளங்களை காணமுடிந்தது.
அவைகளில் படங்களை பதிவேற்றிவிட்டு அவற்றின் இணைப்பை மட்டும் எமது வலைபதிவில் போஸ்ட்ரில் போட்டால்
விடயம் சரி. கீழே உள்ள படம் அப்படிதான் இணைத்துள்ளேன்.
நான் நினைக்கிறேன் ஹலோவால் யுனிக்கோடில் தமிழை சரியாக காட்டமுடிவதில்லை என்று, நான் சொல்வது
சரியா அல்லது வேறு எதாவது செட்டிங் செய்யவேண்டுமா? வலைப்பதிவுலகில் போஸ்ட் பல அனுப்பி ஜீமெயில்
பெற்றவர்கள்( அதாங்க! பழம் தின்று கொட்டை போட்டவங்க!) இதற்கு பதில் சொல்லலாமே!

Sunday, June 13, 2004

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..



ஒன்றரை அடி உயரத்தில் குவளையைத்தூக்கி
ரீ ஆத்தி, ஒரு கிளாஸில் பாதி நுரையும் மீதி
ரீயும், இலவசமாய் ஊர் வம்பும் தரும் நாயர் கடையின் ரீயின் சுவை,
ஞாபகத்தில் வருகிறதே..... ஞாபகத்தில் வருகிறதே....

Saturday, June 12, 2004

கடைசி நேர தவிப்பைத் தவிர்க்க.

சோம்பல் எல்லோருக்கும் உள்ளது. சோம்பலை வெல்பவர்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். எல்லோருக்கும் தெரியும். எல்லோரும் சோம்பலை வெற்றிகொள்கிறார்களா என்றால் எல்லோராலும் அப்படி முடிவதில்லை. என்ன காரணம்?
உடல் ரீதியான காரணம் ,மனரீதியிலான காரணங்கள் இப்படி!
உடல் ரீதியாக என்றால் சில நோய்களின் காரணமாக உடல் தளர்வு இருக்கலாம்.இதற்கு டாக்டரைத்தான்
அணுகவேண்டும். சிலருக்கு மனரீதியிலான காரணங்கள் டாக்டரை அணுகவேண்டிய அளவில் இருப்பதும் உண்டு. இங்கே கடைசி நிமிடம் வரை காத்திருப்பதை தவிர்க்கவும் அதனால் எற்படும் பண செலவு மற்றும் ,மன, உடல் உளைச்சலைத் தவிர்க்க மேற்கொள்வேண்டிய சில வழிமுறைகள்
இது! உங்களுக்கு மட்டுமல்ல எனக்காகவும் தான்.

01) பெரிய நம்மையே அடக்கி ஆளக்கூடிய வேலைகளை சிறிய செய்யக்கூடிய வேலைகளாக பிரித்து
ஒவ்வொன்றாக செய்யலாம்.

02) ஒரு வேலையை செய்யவேண்டும் என்றால் உடல் பிரகாரமான நடவடிக்கை எடுங்கள்.
உ+ம் ஒரு புத்தகம் வாசிப்பது நெடுநாளாக தள்ளிப்போகிறது என்றால் அப்புத்தக்கத்தினை
அலுமாரியில் இருந்து எடுத்து நீங்கள் படிக்கும் மேசையில் வையுங்கள்.

03) ஒருவருக்கு ஒன்றைச் செய்கிறேன் என்று வாக்குக் கொடுங்கள் உங்கள் நண்பருக்கு/ மேல் அதிகாரிக்கு குறித்த நேரத்தில் ஒரு வேலையைச் செய்வதாக உறுதியளித்து அதன் படிசெய்து முடியுங்கள்.

04) ஒரு பெரிய திட்டத்தினை ஒவ்வொரு கட்டமாக முடிக்கும் போது உங்களுக்கே நீங்கள் கைமாறு செய்து கொள்ளலாம்

05)நீங்கள் நேரம் கடத்துகிறீர்கள் என்று நீங்கள் உணரும் போது"நான் எனது நேரத்தினை வீணாக்குகிறேன்"என்று உங்களிடமே
நீங்கள் ஒத்துக்கொள்ளுங்கள். இந்த ஞாபகம் ஊட்டுதல் கடைசியில் காலதாமதம் செய்வதை கட்டுப்படுதவும். நிறுத்தவும் வழி வகுக்கும்.

06)தாமதத்தின் விலையை எண்ணிப்பாருங்கள்.
* வேலைப்பழு அதிகரிக்கலாம்.
*பணச் செலவு அதிகரிக்கலாம்.
*கடைசி நிமிடம் வரும் போது நீங்கள் சுகவீனம் அடைந்தால் என்ன நிலைமை?
*நீங்கள் ஒத்திப்போட்ட திட்டம் எதிர்பார்த்த காலத்தினை விட அதிககாலம் ,பணச் செலவு எடுத்தால் என்ன செய்வீர்கள்?
* தொடர்ந்து எதாவது தடங்கல்கள் வந்தால் என்ன செய்வீர்கள்?
*உங்கள் கடைசி நிமிட வேலையின் தரம் எப்படி அமையும் என்பதை யோசித்தீர்களா?

Friday, June 11, 2004

நான் என்பது நீயல்லவோ சரிகா!

கமல்ஹாசன் சரிகா இணைந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தகவல் உண்மையாக இருந்தால் மிகவும் சந்தோசம் அடைகிறேன். நல்லதொரு தமிழ் கலைஞன். சிவாஜிக்கு பின்பு நடிப்பாற்றலால் தமிழ்
உள்ளங்களைக் கட்டிப்போட்ட பாசாங்கில்லாத ஒரு சிறந்த கலைஞன். கமலின் மண வாழ்க்கைமுறிவு
பல ரசிகர்களின் மனதினை பாதித்திருந்தது. கமலின் தனிப்பட்ட வாழ்வில் கமல் ஒரு மாதிரியானவராக
இருந்தாலும் அதை அவர் என்றும் மறைத்தில்லை. தாங்கள் செய்பவற்றை எல்லாம் மறைப்பதற்காக பலப்பல
வேடங்கள் போடும் நடிகர்கள் மத்தியில் கமல் திரைக்கு வெளியே வேடங்கள் போட்டதில்லை. இப்படி நான் சொல்வதால், தவற்றை செய்துவிட்டு ஒப்புக்கொண்டால் செய்யும் தவறு சரியாகிவிட்டது என்று அர்த்தமல்ல.
நான்கு படம் நடித்துவிட்டாலே" நாற்காலிக்கனவு"காணும் நடிகர்கள் மத்தியில் அரசியலுக்கு என்றுமே தான்
வரப்போவதில்லை என்று கூறியவன் இந்தக் கலைஞன். சிவாஜிக்கு பின்னர் வரலாறு இவன் பெயரைதான்
உச்சரிக்கும். மகிழ்ச்சியுடன் மனைவி பிள்ளையுடன் இணைந்திருக்கும் கமல் இனிவரும்காலங்களில் புத்துணர்ச்சியுடன் பல படைப்புக்களை தருவார் என்று நம்பலாம். வாழ்த்துக்கள் கமல்!

Tuesday, June 01, 2004

கடலே!

இங்கு கனடாவில் வெளிவரும் பத்திரிகை ஒன்றிலே அண்மையில் வந்த கவிதை ஒன்று எனது மனதினைத்
தைத்தது.உங்களுடன்பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஈழத்தின்எழுச்சிக் கவிஏர் காசி ஆனந்தனின்
கவிதை வரிகள் இவை..

கடலே!

ஈழம் தமிழகம் எனுமிரு நாட்டிடை
ஓலம் இடுமோர் உப்புக் கடலே!


இந்நாள் இடிநகர் அலைகக் குரல் எழுப்பி
என்னதான் நீ இரைந்து நின்றாலும்
கோடி கரங்கள் ஒருநாள் உன்னை
மூடித் தமிழ்மண் போடுவதுண்மை!


அந்நாள் உனது சாநாள் ஆகும்!
நாங்களெலாம் கரத்தே பறைகள்
தாங்கி நின்று தாளம் கொட்டுவோம்!


உள்ளத் தோணியில் ஊர்ந்த தலைவனைக்
கள்ளத் தோணி ஆக்கிக் கனிமகள்
ஈழநாட்டில் எலும்பாய் உருக
காளையைத் தமிழ்நாட்டுக் கனுப்பினாய்!


அலறும் தாயைத் தமிழகத் தமர்த்திக்
குழறும் சேயைக் கொழும்பில் விட்டாய்!
அண்ணன் ஒருவன் தொண்டியில் புலம்பத்
தம்பி ஒருவனைக் கண்டியில் வைத்தாய்!


கடலே! உன்னை இனியும் தமிழர்
விடுவார் என்று கருதுதல் வேண்டா!
நின்றன் சாநாள் நெருங்கிவிட்டது!
வெறி அலைக் கரங்கள் வீசும் உன்னைச்
சிறைசெய் தடக்கி நின்னுயிர் சிதைத்து
மண்ணிடும் நாள்வரை ஓயோம்.....
அந்நாள் தமிழர் ஆளுநாள் கடலே!

வலைப்பதிவுகளும் நானும்

சில நாட்களின் பின்னர் இங்கே எழுதுகிறேன்.பல்வேறு வேலைப்பழுக்கள் காரணமாக நேரம் கிடைக்கவில்லை.
இனி தொடர்ந்து எழுதுவேன். தமிழில் எழுதுவது கைகளுக்கு சிரமத்தினை கொடுத்தாலும், மனத்தினில் மகிழ்ச்சியை
க் கொடுக்கிறது. தமிழில் எழுதுவது என்பது கைகளினால் உணவையுண்பது போலவும் ஆங்கிலத்தில் எழுதுவது
என்பது கரண்டியினால் உணவை உண்பது போலவும் எனக்கு தெரிகிறது.உங்களுக்கும் இப்படியான உணர்வுகள்
, எண்ணங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
முன்பு தமிழில் இணையம் அல்லது தமிழிணையம் பிரபலமாகிக்கொண்டிருந்த காலங்களில்
இணையத்தளங்கள் புதிது புதிதாக முளைவிட்டதுபோல இப்போது வலைப்பதிவுகள் திசைக்கொன்றாக
(எனக்கெனவோ வலைப்பூ என்பதனை விட வலைப்பதிவு என்பது தான் பிடிக்கிறது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?)
வந்து கொண்டுஇருக்கின்றன.இணையத்தில் பத்திரிகை படிப்பது எப்படி தவறாதோ அதே போல அண்மைக்காலங்களில் நான்
வலைப்பதிவுகளுக்கும் வருவதும் தவறாமல் நடக்கிறது தமிழ்நாட்டுத்தமிழ்(இதில் சென்னை
த்தமிழும் அடக்கம்),இலங்கைத்தமிழ்,சிங்கைத்தமிழ், மலேசியத்தமிழ் இப்படி பலப்பல தமிழ் பேசி வருகின்றன.எல்லாத்தமிழும் எனக்கு புரிந்தாலும் சத்தியமாக எனக்கு இந்த
சென்னைத்தமிழ் மட்டும் புரியவில்லை.மற்றவர்களுக்கு புரிகிறதா என்பதுவும் எனக்கு புரியவில்லை.
. சில வலைப்பதிவுகள் நண்பனுடன் உரையாடுவது போல
எம்முடன் வம்பளக்கின்றன.சில வலைப்பதிவுகள் காதல் மொழி
பேசி கிளுகிளுப்பூட்டுகின்றன.சில அடிமனத்து வேதனை
களை ,நிகழ்கால விடயங்களை பகிர்ந்து கொள்கின்றன.சில மொட்டாகி பூப்பதுக்கு முன்னரே கருகிநிற்பதையும் காண
முடிகிறது.மொத்தத்தில் வலைப்பதிவுகள் எல்லாமே எதோ!! ஒரு வகையில் சுவாரசியத்தினைத் தருகின்றன.

Monday, May 24, 2004

பிறப்பு

இந்தியாவின் 13வது பிரதமராக 71 வயதான திரு மன்மோகன் சிங்
சனிக்கிழமை மாலை பதவி ஏற்றுள்ளார். சோனியாகாந்தி பிரதமராக
மறுத்தமையினால் 82 சதவீதமான இந்துக்களைக் கொண்ட இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய சமூகத்தினைச் சேர்ந்த மன்மோகன்
சிங் பதவியேற்க முடிந்துள்ளது. இந்திராகாந்தி கொலை அதன் விளைவாக ஏற்பட்ட சீக்கியர்கள் மீதான வன்செயல்கள் காரணமாக
காங்கிரஸ் கட்சியின் மீது சீக்கியர்கள் கொண்டிருந்த வெறுப்பும் மறைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது. மன்மோகன் சிங்
பிறந்தது பாகிஸ்தானில்(இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் முன்பு) என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள அவர் பிறந்த ஊரைச் சேர்ந்த மக்கள் பலர் மகிழ்சியுடன்
கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். இங்கு ஒன்றைக்குறிப்பிடலாம். இந்தியாவின் புதிய பிரதமர் பாகிஸ்தானில் பிறந்ததுபோல் பாகிஸ்தான் அதிபர் பார்வேஸ் முஸ்ராப் பிறந்தது இந்தியாவில் உள்ள
டெல்லியில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, May 20, 2004

வாய்ச்சொல்லில் வீரரடி -2

உதவி பண்ணாவிட்டாலும் பரவாயிலை. உபத்திரம் பண்ணாதீர்கள் என்பது தான் இவர்கள் கொள்கை.
மதில் மேல் பூனை மாதிரி இருந்துவிட்டுப்போனாலும் பரவாயிலை. கடந்த வருடம் நடிகர்,தயாரிப்பாளர்,அரட்டை அரங்கம் புகழ் விசு அவர்கள் கனடா வந்து சூடு பட்டுக்கொண்டார்
புலிகளைப்பற்றியும்,தமிழர்களை பற்றியும்,போராட்டத்தினைப் பற்றியும் பல அவதூறு கருத்துக்களை அவரின் நிகழ்ச்சிகளின் வாயிலாக கேட்டிருந்த
நிலையில் அவரின் நிகழ்ச்சிகளிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

கடைசியில் அவரின் நிகழ்சி படுதோல்வியில் முடிந்தது.இலவசமாகநுழைவுசீட்டு வழங்கப்படும் என்று சில வானொலிகளில் அறிவித்தும் கூட கூட்டத்தினை திரட்ட முடியவில்லை.
வருகின்ற வாரங்களில் கூட பலதென் இந்திய கலைஏர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் இடம் பெற இருப்பதாக அறிவிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.
இனி கோடைமுழுவதும் இப்படியான நிகழ்வுகள் தான்.
யாராக இருந்தாலும் வருபவர்கள் ஈழபோராட்டம் சம்பந்தமாக ஒரு சரியான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு
வருவது அவர்களுக்கு நல்லது.உதவி செய்யாதவர்காளைக் கூட மன்னிக்கதயாராக இருக்கும் ஈழத்தமிழர்கள் உபத்திரம் செய்தவர்களை மன்னிக்க தயாராகவே இல்லை

Tuesday, May 18, 2004

வாய்ச்சொல்லில் வீரரடி

எங்கும் பச்சை பசேல் என்று பசும் புல் வெளிகள்.இடையிடையே கூடையை கவிழ்த்து கொட்டியது போல
மலர்கள்.மொட்டையாய் நின்ற மரங்கள் இலைகள் துளிர்த்து கிளை பரப்பி
நிற்கின்றன.பனிக்காலத்தில் பார்த்த தெருக்கள் கூட இப்போ கோலம் மாறி காட்சி தருகின்றன. இடை, தொடை தெரிய பெண்கள் உடை
உடை அணியதொடங்கினாலே கோடை தொடங்கி விட்டது என்று அர்த்தம்
எங்கும்,எல்லோருக்கும் மகிழ்ச்சி
ஆசிய நாடுகளில் வாழ்வோருக்கு சுட்டெருக்கும் வெய்யிலின் பின் வரும் மழை எவ்வளவு மகிழ்ச்சியை தருமோ அதை விட ஒரு படி
ஒரு படி மேலே என்று கூட சொல்லலாம் காது மடல்களை மரத்துப்போகவைக்கும் கடும் குளிருக்கு பின்னர் வரும் இளவேனில்
காலம் அதற்குபின்னர் வரும் வசந்தகாலம் எல்லாமே மிக மிக மகிழ்சியை தரும்.இனி ஒரு மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு
ஒரே கொண்டாடம் தான்.பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூடகதைப்பது ,உறவாடுவது எல்லாம் இனித்தான்.
சிலருக்கு பக்கத்து
வீட்டில் யார் இருக்கின்றனர் என்று தெரிவதே இந்த காலப்பகுதில் தான்
கேளிக்கைகள் ,விழாக்கள்,களியாட்டங்கள் என்று அமளிப்படும்.இந்தியாவில் இருந்து நானாவிதமான கலைஎர்களும் கனடா
வந்து போவார்கள்.அதை ஒட்டி வாதங்களும் பிரதிவாதங்களும் கிளம்பும்.அந்தவகையில் இந்த வருடம் முதன்முதலில் இங்கு வருகை தந்தவர்
எல்லோராலும் ஆச்சி என்று அழைக்கப்படும் மனோரமா அவர்கள். கடந்த வாரம் இரு தினங்கள் இங்கு மேடை நிகழ்ச்களில் கலந்துகொ
ண்டார்.இங்கு இயங்கும் தமிழ் வானொலி ,தொலைக்காட்சிகளில் அவரின் செவ்விகள் மாறி,மாறி இடம் பெற்றன.ஒரு வானொலியில்
ஆச்சியின் செவ்வி இரவு 1.00 மணிகடந்தும் இடம்பெற்றுக்கொண்டு இருந்தது. ரசிகர்கள் அந்த வேளையிலும் கூட அழைத்து
பேசியதை கேட்க முடிந்தது.
இரு வானொலி செவ்விகளை என்னால் செவி மடுக்க முடிந்தது ஈழப் போராட்டம் சம்பந்தம்மாகவும்
பலர் கேள்விகள் கேட்டதையும் மனோரமா அவர்கள் சாதுரியமா பதில் அளித்ததையும் கேட்க முடிந்தது. இங்கு வரும் சிலர் இங்கு
சொல்வது எல்லாம் அங்கு தெரியவாபோகுது என்ற நினைப்பில் அள்ளிவிடுவதும் சிலர் தமிழ்நாட்டு பொடா நிலமைகளை கூறி
ஒதுங்குவதும் வழமைதான். இங்கு வாழும் ஈழத்தமிழர்களின் ஆதங்கம் என்னவென்றால் எவ்வளவோ இன்னற்பட ,துயரப்பட
தங்களுக்கு ஆதரவாக இந்த கலைஎர்கள் குரல் தன்னும் கொடுக்கவில்லயே என்பதுதான்.

தொடரும்

Sunday, May 16, 2004

ஆகா!! கிளம்பிட்டேன் அய்யா!!! கிளம்பிட்டேன்!!!!

எனது வலைப்பதிவை தொடங்கியுள்ளேன்.எனது மனவெளி எல்லாவற்றையும் தொட்டுச்செல்லும். புயலும் வீசும்,தென்றலும் தவழும்
மொத்தத்தில் எல்லாமே வரும்.

அன்புடன்,உங்கள்

கரிகாலன்